2012-05-12 16:01:45

பெண்களின் உரிமைகள் மற்றும் மறைப்பணிக்கு ஆந்திரத் தலத்திருஅவை கவனம்


மே 12,2012. பெண்களின் மதிப்பை உணருதல், சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குதல், மறைப்பணியை வளர்த்தல் ஆகியவை ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மறைப்பணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாக Amruthavani கலைத்தொடர்பு மைய இயக்குனர் அருட்பணி Udumala Showry Bala கூறினார்.
ஆந்திராவில் கிறிஸ்தவம் பரவியதன் 300ம் ஆண்டை முன்னிட்டு விஜயவாடாவில் இவ்வாரத்தில் நடைபெற்ற மறைப்பணி மாநாட்டின் இறுதியில், ஆந்திர மாநிலத்தில் திருஅவையின் எதிர்காலம் குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டது என்று அவர் கூறினார்.
ஆந்திராவில் தொடக்ககால மறைபோதகர்களின் பங்கு மற்றும் அம்மாநிலத்தில் சுமார் 300 ஆண்டுகளாக விசுவாசத்தைக் காத்து வந்துள்ள விசுவாசிகளின் துணிச்சலான வாழ்வை அவ்வறிக்கை பாராட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசுக்கும் தலத்திருஅவைக்கும் இடையே நல்லுறவை வளர்ப்பதிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் சுமார் இரண்டாயிரம் குருக்களும், ஆறாயிரம் அருள்சகோதரிகளும் அருள் சகோதரர்களும் அரசோடு சேர்ந்து உழைத்து வருகின்றனர் என்றும் அருட்பணி பாலா கூறினார்.
இந்தியாவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தை வகிக்கும் ஆந்திர மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 8 கோடியே 46 இலட்சமாகும். இம்மாநிலத்தின் 13 மறைமாவட்டங்களில் சுமார் ஆயிரம் பங்குகளும், 11 ஆயிரம் குருக்களும் உள்ளனர்.
இம்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியத் திருப்பீடத்தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, அம்மாநிலத்தின் 23 மாவட்டங்களின் 13 ஆயர்கள், இன்னும் பல பிரமுகர்கள் என நான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.