2012-05-12 15:57:54

திருத்தந்தை, இத்தாலிய அரசுத்தலைவர் சந்திப்பு


மே 12,2012. நெருக்கடி மிகுந்த சவால்களை எதிர்நோக்கி வரும் இத்தாலி நாட்டுக்காகத் தான் தொடர்ந்து செபம் செய்து வருவதாக இத்தாலிய அரசுத்தலைவரிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாப்பிறைப் பணியைத் தொடங்கி ஏழு ஆண்டுகள் நிறைவைக் கண்டுள்ள திருத்தந்தையைக் கவுரவிப்பதற்காக இவ்வெள்ளி மாலை வத்திக்கான் பாப்பிறை 6ம் பவுல் மண்டபத்தில் இசைக்கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த இசைக்கச்சேரிக்கு முன்னர், இத்தாலிய அரசுத்தலைவரை சுமார் 20 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய திருத்தந்தை, இத்தாலி மற்றும் அந்நாட்டினர் மீது தான் கொண்டிருக்கும் அன்பையும் உறுதிப்படுத்தினார்.
உலகளாவிய அமைதி, குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி போன்ற விவகாரங்களை இவ்விரு தலைவர்களும் கலந்து பேசினர் என்று திருப்பீடப் பத்திரிக்கை அலுவலகம் கூறியது.
மேலும், இந்த இசைக்கச்சேரியில் சிறிய உரையாற்றிய திருத்தந்தை, “ஓ! ஆண்டவரே, எனது நம்பிக்கையை மகிழ்ச்சியோடு உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன். உமது தூய அன்னை போல நான் உம்மை அன்பு செய்து, அதன்மூலம் எனது ஆன்மா, இவ்வுலகப் பயணத்தின் இறுதியில் பேரின்ப வீட்டை அடையும் பேறு பெறும் என்று இந்த இசையைக் கேட்ட பின்னர் நாம் செபிக்கின்றோம்” என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தக் கச்சேரியை வழிநடத்திய Riccardo Muti என்பவருக்கு, Papal knighthood என்ற புனித பெரிய கிரகரியின் சிலுவையை அணிவித்தார் திருத்தந்தை. இத்தாலிய அரசுத்தலைவர் நாப்போலித்தானோ, திருத்தந்தைக்கு மிகவும் மதிப்புமிக்க வயலினைப் பரிசாக அளித்தார்.
மேலும், ஆழ்நிலை தியானங்களுக்கும், துறவு மடங்களுக்கும் புகழ்பெற்ற Arezzo, La Verna, Sansepolcro ஆகிய மூன்று இத்தாலிய நகரங்களுக்கு ஒரு நாள் மேய்ப்புப்பணி பயணத்தை இஞ்ஞாயிறன்று மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.