2012-05-12 15:29:08

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மே 13, இந்த ஞாயிறைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்ததும், மனதில் இதமான எண்ணங்கள் எழுந்தன. இனிமையான நினைவுகள் நிறைந்தன. மே 13, பாத்திமா நகரில் மரியன்னை காட்சி தந்தத் திருநாள். மே மாதம் இரண்டாம் ஞாயிறு, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் அன்னை தினம் கொண்டாடப்படுகிறது.
பாத்திமா அன்னை திருநாள், அன்னை தினம் இரண்டையும் இணைத்து சிந்திக்கும்போது, என் நினைவு 31 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. 1981ம் ஆண்டு மே 13ம் தேதி புதன்கிழமை. அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது வழக்கமான புதன் பொது மறைப் போதகத்தை வழங்க வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திற்குத் திறந்த காரில் வந்தார். அங்குக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்தனர். மக்கள் கூட்டத்தில் இருந்த Mehmet Ali Agca என்ற இளைஞர் துப்பாக்கியால் திருத்தந்தையை நோக்கிச் சுட்டார். திருத்தந்தை காருக்குள் சரிந்து விழுந்தார். அவர் சரிந்து விழுந்தபோது, ஓர் அன்னையின் உருவில் மரியா அவரைத் தாங்கிப் பிடித்திருப்பதைப் போன்ற ஓவியங்கள் உலகெங்கும் மின்னஞ்சல்களில் அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வின் முதல் ஆண்டு நிறைவேறும் நேரத்தில், 1982ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான் பால் போர்த்துகல் நாட்டில் உள்ள பாத்திமா திருத்தலம் சென்றிருந்தபோது, மீண்டும் அவர்மீது மற்றொரு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அவர் உயிர் தப்பித்தார். 1981ம் ஆண்டு மே 13, அடுத்த ஆண்டு மே 12 என்ற இரு நாட்களிலும் அருளாளர் இரண்டாம் ஜான் பால் அவர்களின் உயிரைக் காத்தது அன்னை மரியா என்ற கருத்து மக்கள் மனதில் இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளது. பாத்திமா அன்னைத் திருநாளையும் அன்னை தினத்தையும் இணைத்து கொண்டாடும் இந்த நன்னாளில், நம்மைப் பேணிக் காத்து வரும் அன்னை மரியாவையும், நமது அன்னையர் ஒவ்வொருவரையும் மனதார, மனதுருக எண்ணி, இறைவனுக்கு முதலில் நமது நன்றியைக் கூறுவோம்.

அம்மாவை, அன்னையை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர் சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்தை வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கின்றன. தாய், அன்னை அல்லது அம்மா என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட இக்கவிதை இதோ:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்:
வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தருவதற்கு எமது குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஒரு நாட்டுப் பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

Julia Ward எழுதிய இக்கவிதை இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறுகின்றது. கடந்த ஆண்டு – மே 2, 2011 - ஓசாமா பின் லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். உலக அமைதிக்குப் பெருமளவில் ஊறு விளைவித்த ஒரு மனிதரின் மரணம் ஓரளவு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டு நாம் கண்டது என்ன? நிம்மதிக்குப் பதில் இன்னும் அதிக பயத்தை, கவலைகளை நாம் சந்தித்து வருகிறோம் என்பதுதானே உண்மை?

அன்னை தினத்திற்குக் கூறப்படும் மற்றொரு பின்னணியும் என் கவனத்தை ஈர்த்தது. Leonard Sweet என்பவர் தன் மறையுரையில் இந்தப் பின்னணியைப் பற்றிக் கூறுகிறார். 16ம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்தில் 'Mothering Sunday' என்ற பழக்கம் இருந்தது. மேமாதம் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பது கத்தோலிக்க பரம்பரையில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். அந்த மேமாதத்தின் ஒரு ஞாயிறு மரியன்னையின் நினைவாக 'Mothering Sunday' என்று அழைக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல செல்வந்தர்களின் இல்லங்களில் பெண்கள் இரவும் பகலும் பணி செய்து வந்தனர். அவர்களுக்கு விடுமுறை நாள் என்பதெல்லாம் கிடையாது. தங்கள் இல்லங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடையாது. எனவே, மேமாதத்தின் ஒரு ஞாயிறன்று இந்தப் பணிப்பெண்கள் தங்கள் குடும்பங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுடன் அந்த நாளைச் செலவிட விடுமுறை வழங்கப்பட்டது. அந்த நாளுக்கு 'Mothering Sunday' அதாவது 'தாயாகும் ஞாயிறு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

16ம் நூற்றாண்டில் நிலவிய இந்தச் சூழல் மனதை உறுத்துகிறது. செல்வந்தர் வீட்டு வேலைகளில் ஆண்டு முழுவதும் துன்பப்படும் பெண்களுக்கு ஒரு ஞாயிறை விடுமுறையாகத் தந்து 'தாயாகும் ஞாயிறு' என்று அழைப்பதை அநீதி என்று மனம் சொல்கிறது. ஆயினும், இப்படிப்பட்ட ஓர் எண்ணமாவது இருந்ததே என்று நமக்கே நாம் ஓரளவு சமாதனம் சொல்லிக் கொள்ளலாம். 16ம் நூற்றாண்டில் நிலவிய இதே நிலை இன்றும் தொடர்வதை நாம் அறிவோம். வறுமையின் காரணமாகக் குடும்பங்களை, குழந்தையைப் பிரிந்து வேறு இல்லங்களில், வேற்று நாடுகளில் பணி செய்யும் அன்னையர் பல கோடி பேர் உள்ளனர். அவர்களை இன்று சிறப்பாக எண்ணி நம் செபங்களை எழுப்புவோம். பொருளாதார நிர்ப்பந்தங்களால் தங்கள் தாய்மை நிலைக்குரிய உணர்வுகளைப் புதைத்துவிட்டு பரிதவிக்கும் இவர்களுக்கு விரைவில் ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
Julia எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம் பதியப் பதிய மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும் பல இடங்களில் தோன்றி இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.
பல்வேறு போர்களால், போராட்டங்களால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்குத் தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம் வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.