2012-05-12 15:59:02

சிரியாவில் அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு நாடுகள் உதவுமாறு திருப்பீடப் பேச்சாளர் வேண்டுகோள்


மே 12,2012. ஓராண்டுக்கு மேலாக மக்கள் எழுச்சிகளும் மோதல்களும் இடம்பெற்று வரும் சிரியா நாட்டின் அமைதி ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படுவதற்கு அனைத்துலக சமுதாயம் உதவுமாறு அழைப்பு விடுத்தார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
தமாஸ்கசில் இவ்வியாழனன்று இடம் பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் பலியான கத்தோலிக்கச் சமூகத்தின் குடும்பங்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதாகத் தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, இந்தத் தாக்குதல்களுக்குத் திருப்பீடத்தின் வன்மையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.
சிரியா நாடு, அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டிய தேவையையும், அந்நாட்டின் மீது இது குறித்த சர்வதேச அழுத்தத்தின் அவசியத்தையும் இவ்வன்முறை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.
சிரியாவின் தலைநகர் தமாஸ்கசில் இடம் பெற்ற வாகன குண்டுவெடிப்பு வன்முறைத் தாக்குதல்கள், அந்நாட்டில் கடந்த 14 மாதங்களில் இடம் பெற்றுள்ள கடுமையான வன்முறைகள் என்றும், இதில் சுமார் 55 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இத்தாக்குதல்களுக்கு அரசும் எதிர்தரப்பும் ஒன்றையொன்று குற்றம் சுமத்தி வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.