2012-05-11 15:02:05

ஒவ்வொரு மனிதருக்கும் நற்செய்தியைப் பெறுவதற்கு உரிமை உள்ளது - திருத்தந்தை


மே 11,2012. நற்செய்தியின் தூதுவர்கள், தங்களது போதகரும் ஆண்டவரும் போல தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை துணிவை இழக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் 170 தேசிய இயக்குனர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த நற்செய்தி அறிவிப்புப் பணியில் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் இடம் பெற்று வரும் இக்காலத்தில் மனிதர் மட்டும் தனிமையையும் வேதனையையும் சோர்வையும் அனுபவிக்கின்றனர், நற்செய்தியின் தூதுவர்களும் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்தவ வரலாற்றில், எண்ணற்ற மறைசாட்சிகள் எப்போதும் இருந்து வருகிறார்கள், நற்செய்தி அறிவிப்புப் பாதையில் இவர்களின் எண்ணிக்கையும் சாட்சியங்களும் இன்றியமையாதவைகள் என்றும் திருத்தந்தை கூறினார்.
உலகில் எப்போதும் அவசரத் தேவையாக இருக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணி, இக்காலத்தில் உலகின் துரிதப் பாதையோடு சென்று, கிறிஸ்துவை ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இன்றைய மறைப்பணியானது தனது நம்பிக்கையை இறைவனின் செயலில் வைத்து, ஆழமான செபத்தில் ஈடுபடவும், தூய ஆவியின் வலிமையையும் ஒளியையும் இறைஞ்சுவதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் அவர் கூறினார்.
வத்திக்கானில் இத்திங்களன்று தொடங்கிய பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் தேசிய இயக்குனர்களின் கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைகின்றது.








All the contents on this site are copyrighted ©.