2012-05-11 15:06:50

அனைத்துலக திருநற்கருணை மாநாடு அயர்லாந்து திருஅவையின் காயங்களைக் குணப்படுத்த உதவும் - டப்ளின் பேராயர் நம்பிக்கை


மே 11,2012. வருகிற ஜூன் மாதத்தில் அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு அந்நாட்டுத் திருஅவையின் காயங்களைக் குணப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் டப்ளின் பேராயர் Diarmuid Martin.
வருகிற ஜூன் 10 முதல் 17 வரை தலைநகர் டப்ளினில் நடைபெறவிருக்கும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வியாழனன்று விளக்கிய பேராயர் மார்ட்டின் இவ்வாறு கூறினார்.
அயர்லாந்து திருஅவைக்குள் பிளவுகள் இருப்பதைக் குறிப்பிட்ட பேராயர் மார்ட்டின், இந்தத் திருநற்கருணை மாநாடு, அத்திருஅவைக்குள் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் ஏற்படுத்துவதற்கு உதவும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
அயர்லாந்தின் உள்நாட்டுப் போர் இடம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் 1932ம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற திருநற்கருணை மாநாட்டையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார் டப்ளின் பேராயர்.
“திருநற்கருணை : கிறிஸ்துவோடும் ஒருவர் ஒருவரோடும் ஒன்றிப்பு” எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
அயர்லாந்தின் முதுபெரும் தலைவராக இருக்கும் வட அயர்லாந்தின் Armagh கர்தினால் Sean Brady, அயர்லாந்து திருஅவையில் 1970களில் தவறிழைத்த ஓர் அருட்பணியாளர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லையெனக் குறைகூறி, அத்தலைமைப் பொறுப்பிலிருந்து கர்தினால் விலக வேண்டுமென்ற குரல்கள் அந்நாட்டில் ஒலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், செயற்கை முறை குடும்பக் கட்டுப்பாடு, குருக்களின் கன்னிமை, ஒரேபாலினச் சேர்க்கை, பெண் குருக்கள் போன்ற விவகாரங்கள் மீதானத் தடையை நீக்க வேண்டுமென கேட்டு வரும் 5 அயர்லாந்து குருக்கள் மீதும் திருப்பீட விசுவாசக்காப்புப் பேராயம் அண்மையில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.