2012-05-10 15:33:41

கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உறவுகளை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றன - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


மே,10,2012. இலத்தீன் அமெரிக்க நாடுகளில், சிறப்பாக, அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளில், கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நிலவி வரும் நட்புறவும், உறவுகளை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் தனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் யூதர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இந்நாடுகளில் இருந்து வத்திக்கானுக்கு வந்து தன்னைச் சந்திக்கும் முதல் யூதப் பிரதிநிதிகள் அவர்களே என்பதை மகிழ்வுடன் சுட்டிக் காட்டினார்.
'நமது காலத்தில்' என்ற பொருள்படும் Nostra Aetate என்ற இரண்டாம் வத்திக்கான் பேரவை ஏடு வெளிவந்த 50ம் ஆண்டை வருகிற அக்டோபர் மாதம் சிறப்பிக்கிறோம் என்பதை நினைவுபடுத்திப் பேசியத் திருத்தந்தை, கத்தோலிக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நிலவிவந்த நம்பிக்கையற்றச் சூழல் மாறி, இவ்விரு குழுக்களுக்கும் இடையே உறவுகள் வளர்வதற்கு இரண்டாம் வத்திக்கான் பேரவை உதவியாக இருந்தது என்று எடுத்துரைத்தார்.
ஆன்மீக, நன்னெறி விழுமியங்களை இழந்து வரும் உலகில் மனித மாண்பும், உண்மையான அமைதியும் நிலவ மனம் திறந்த உரையாடல்கள் தேவை என்று கூறியத் திருத்தந்தை, யூதப் பிரதிநிதிகள் வத்திக்கானுக்கு வருகை தந்திருப்பது, கத்தோலிக்க-யூத உரையாடலை வளர்க்கும் ஒரு முயற்சி என்ற தன் மகிழ்வையும் வெளிப்படுத்தினார்.
யூதப் பிரதிநிதிகளையும், அவர்கள் குடும்பங்களையும் தான் வாழ்த்துவதாகவும், அவர்களுக்கு இறைவனின் ஆசீரும் நிறை அமைதியும் கிடைக்க தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தன் வாழ்த்துரையின் இறுதியில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.