2012-05-10 15:34:45

அரசு விதித்துள்ள அரசாணைக்கு Papua New Guinea ஆயர்கள் வன்மையான எதிர்ப்பு


மே,10,2012. பாலியல் கல்வியைப் பள்ளிகளில் புகட்டும் ஓர் அங்கமாக பள்ளிகளில் ஆணுறை வழங்கப்படவேண்டும் என்று Papua New Guinea அரசு விதித்துள்ள அரசாணைக்கு அந்நாட்டின் ஆயர்கள் வன்மையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆணை மனசாட்சியைப் பாதிக்கும் ஓர் ஆணை (‘Conscientious Objection’) என்று கூறிய ஆயர்கள், இந்த ஆணையை அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள் பின்பற்றாது என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பரவி வரும் HIV, AIDS நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இதனை மேற்கொள்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசின் கல்வித்துறை விடுத்துள்ள இந்த ஆணையில் ஒரு சில பயன்கள் உண்டு என்றாலும், கத்தோலிக்கக் கல்வி என்ற கோட்பாட்டிற்கு எதிராகச் செல்லும் எந்த ஓர் ஆணையையும் திருஅவை பின்பற்றாது என்று ஆயர் பேரவையின் சார்பில் பேசிய பேராயர் Francesco Panfilo கூறினார்.
நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்ற பெயரில் ஆணுறைகளை வழங்குவது மாணவச் சமுதாயத்தைத் தவறான பாதையில் இட்டுச் செல்வதாகும் என்றும், இத்தகைய நடவடிக்கை இளையோரிடையே கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்த்து, மேலும் இந்நோய்களைப் பரப்பும் என்றும் பேராயர் Panfilo எடுத்துரைத்தார்.
கல்வியாளர்களும், பெற்றோர்களும் இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே நீடித்த பயன்தரும் என்று Papua New Guinea ஆயர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.