2012-05-09 15:41:41

புற்றுநோயுள்ளோரில் ஆறில் ஒருவருக்கு கிருமித் தொற்று காரணம்


மே,09,2012. மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால் ஏற்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
உலக அளவில் புற்றுநோய் வரும் ஆட்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய், கிருமித் தொற்றுக்களினால் ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இக்கணிப்பின்படி, கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏறத்தாழ இருபது இலட்சம் ஆகும்.
வளர்ந்துவரும் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் கிருமித் தொற்றினால் ஏற்படுகின்ற புற்றுநோய்களின் விகிதாச்சாரம் மேலும் அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
பிரான்சில் உள்ள புற்றுநோய் அனைத்துலக ஆய்வமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவில், புற்றுநோயையும் தொற்று நோயாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை உருவாக்கும் கிருமித் தொற்றுக்களை தடுப்பூசிகள் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சை முறைகள் கொண்டு கட்டுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.