2012-05-09 14:28:21

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


மே 09,2012. உரோமையில் இப்புதன் காலை இதமான வெப்பநிலையிருக்க, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புதன் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்காக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகள் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருந்தனர். கிறிஸ்தவ செபம் குறித்த தனது மறைபோகத்தை இப்புதனன்றும் பல மொழிகளில் வழங்கினார் திருத்தந்தை. அன்புச் சகோதர சகோதரிகளே, தூய பேதுரு குறித்து புகார் செய்யப்பட்ட வழக்கு எருசலேமில் விசாரிக்கப்படுவதற்கு முந்தின இரவில் அவர் சிறையிலிருந்து அற்புதமாய் விடுதலை அடைந்த நிகழ்வு குறித்து, கிறிஸ்தவ செபம் குறித்த நமது மறைபோகத்தில் இன்று நோக்குவோம் என ஆங்கிலத்தில் தனது சுருக்கமான உரையைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3 “பேதுரு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருஅவை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது”(தி.பணி12:5) என்று புனித லூக்கா நமக்குச் சொல்கிறார். ஒளியின் வானதூதரால் பேதுரு சிறையிலிருந்து வழிநடத்தப்பட்டார். எகிப்தில் அடிமைத்தளையிலிருந்து விடுதலையடைந்த இஸ்ரேலின் விரைவுப் பயணம், கிறிஸ்துவின் உயிர்ப்பின் மாட்சி ஆகிய இரண்டையும் பேதுரு சிறையிலிருந்து மீட்கப்பட்ட இந்நிகழ்ச்சி நினைவுபடுத்துகின்றது. பேதுரு சிறையில் இருந்த போது தூங்கிக் கொண்டிருந்தார். இவரின் இச்செயலானது, அவர் ஆண்டவரிடம் முழுவதும் சரணடைந்ததன் அடையாளமாகவும், கிறிஸ்தவச் சமூகத்தின் செபங்களில் அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றது. பேதுரு, கிறிஸ்தவச் சமூகத்தோடு மீண்டும் இணைந்து, உயிர்த்த ஆண்டவரின் மீட்பளிக்கும் வல்லமைக்குச் சாட்சியம் பகர்ந்த போது, இச்செபம் முழுமையடைந்தது. இதில் அளவற்ற மகிழ்ச்சியும் கலந்திருந்தது. சோதனை துன்ப நேரங்களில் செபத்தில் நாம் உறுதியாய் நிலைத்திருப்பதும், கிறிஸ்துவில் நம் அனைத்துச் சகோதர சகோதரிகளின் செபம்நிறைந்த தோழமையும், நம்மைப் பற்றுறுதியில் வைத்துக் காக்கிறது எனப் பேதுருவின் விடுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றது. பேதுருவின் வழிவருபவர் என்ற விதத்தில், உங்களது செப ஆதரவுக்காக எல்லாருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ந்து செபத்தில் ஒன்றித்திருப்பதன் மூலம், நாம் எல்லாரும் ஆண்டவரிடமும், ஒருவர் ஒருவரிடமும் மிக நெருக்கமாக ஈர்க்கப்படுவோம்.
RealAudioMP3 இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தினார். இன்னும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் உதவி தேவைப்படும் தாய்மார் மற்றும் குழந்தைகளின் நலவாழ்வுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்வதற்கென CUAMM என்ற அமைப்பு நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்வோரைச் சிறப்பாக வாழ்த்தினார். இந்தப் பொது நிலையினர் அமைப்பு, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவப் பிறரன்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார். பின்னர் எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.