2012-05-08 15:04:19

வட இலங்கையில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன - இராணுவப் பேச்சாளர்


மே 08,2012. இலங்கையின் வடக்கு மாநிலத்தில், ஆயிரத்து 963 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 7 இலட்சத்து 91 ஆயிரத்து 620 கண்ணிவெடிகள், இராணுவ கண்ணிவெடியகற்றும் பிரிவினர் மற்றும் மனிதநேய கண்ணி வெடியகற்றும் பிரிவினரால் அகற்றப்பட்டிருப்பதாகவும், அகற்றப்பட்டவை அனைத்தும் உடனடியாகவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இன்னமும் 124 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடியகற்றப்பட வேண்டியுள்ளது.
மேலும், வடக்கில் மொத்தமாக 1418 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் 1314 சதுர கிலோ மீட்டர் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இதேபோல் போர்க் காலத்தில் அதிகளவு (219,940) கண்ணிவெடிகள் யாழ் மாவட்டத்திலேயே புதைக்கப்பட்டன. அடுத்தப்படியாக, கிளிநொச்சி (214, 240), வவுனியா (118, 054), முல்லைத்தீவு( 104, 351), மன்னார் (103, 265) என்ற அளவில் அவை உள்ளன.
இதேவேளை போர் நிறைவடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் மூன்று மாநிலங்களில் 5,000 சதுர கிலோமீட்டர் பகுதியில் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 2061 சதுர கிலோ மீட்டர் பகுதியிலேயே கண்ணிவெடிகள் இருப்பது தொழில் நுட்ப ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.








All the contents on this site are copyrighted ©.