2012-05-07 15:00:09

வாரம் ஓர் அலசல் - புதுப் பார்வை பெற....


மே 07,2012. கிழக்கு ஆசியாவின் பெருநகரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் பெருநகரங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 90 விழுக்காட்டினர்வரை கிட்டப்பார்வை பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். பள்ளிப் படிப்பின்போது மாணவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும், மற்றும்பிற பழக்கங்களாலும் அவர்கள் போதிய நேரம் கட்டிடங்களுக்கு வெளியே நேரத்தைச் செலவழிக்காததே இந்தக் கிட்டப்பார்வை பிரச்சனை, இந்த அளவுக்கு வேகமாக அதிகரித்திருப்பதற்குக் காரணம். இவ்வாறு The Lancet என்ற பிரிட்டன் மருத்துவ இதழில் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட சமூகங்களில், முன்பெல்லாம் 20 முதல் 30 விழுக்காட்டினருக்குத்தான் கிட்டப்பார்வை பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு தலைமுறைகளுக்குள்ளேயே இந்த நிலை 90 விழுக்காடாக அதிகரித்துள்ளது என இந்த ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருந்த ஆஸ்திரேலியாவின் கேன்பரா தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Ian Morgan தெரிவித்துள்ளார். இரண்டு, மூன்று மணி நேரமாவது சூரிய வெளிச்சத்தில் இருந்தால், உடலில் தேவையான அளவில் Dopamine என்ற வேதியப் பொருள் உற்பத்தியாகி, கிட்டப்பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது என்றும், கிட்டப்பார்வை வந்த இந்த இளம் வயதினரில் ஐந்தில் ஒருவருக்கு மோசமான பார்வைக் கோளாறோ, சில வேளைகளில் பார்வைத்திறன் அற்றுப்போகும் சூழ்நிலையோ ஏற்படலாம் என்றும் அறிவியலாளர் எச்சரித்துள்ளனர்.
இன்று உலகில் சுமார் 28 கோடியே 50 இலட்சம் பேர் கடுமையானப் பார்வைக் கோளாறுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 3 கோடியே 90 இலட்சம் பேர் கண்பார்வை இல்லாதவர்கள். 24 கோடியே 60 இலட்சம் பேர் பார்வைப் பிரச்சனை உள்ளவர்கள். அத்துடன், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளால் 15 கோடியே 30 இலட்சம் பேர் வாழ்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும்பிற தடுப்பு நடவடிக்கைகளால் 80 விழுக்காட்டுப் பார்வைக் கோளாறுகளைச் சரி செய்திருக்க முடியும். பார்வைக் கோளாறுடன் வாழும் மக்களில் 90 விழுக்காட்டினர் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் உள்ளனர். பார்வைக் கோளாறுப் பிரச்சனை, ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. உலகில் ஒரு கோடியே 90 இலட்சம் சிறார் பார்வையற்றவர்கள். 3 கோடியே 30 இலட்சம் பார்வையற்றோர் வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.
இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய உண்மை நிலவரங்கள் என்னவெனில், உலகில் ஒவ்வொரு ஐந்து வினாடிக்கு ஒருவர் வீதமும், ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு குழந்தை வீதமும் கண்பார்வையை இழந்து வருகின்றனர். உலக அளவில் இந்தப் பிரச்சனையைத் தடுப்பதற்குப் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், பார்வையிழந்தவர்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டுக்குள், மேலும் 7 கோடியே 60 இலட்சம் அதிகரிக்கும். 13 கோடியே 50 இலட்சம் பேர் பார்வைக் கோளாறினால் துன்புறுவார்கள். மேலும், தற்போது உலகிலுள்ள பார்வையற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவிலும், அதற்கு அடுத்தடுத்த எண்ணிக்கையில் ஆப்ரிக்கா, சீனா, அரபுப் பகுதிகள் என இவர்கள் வாழ்கின்றனர். தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளைவிட வளரும் நாடுகளில் இருப்பவர்களுக்கு பார்வையிழப்பு ஆபத்து 5 முதல் 10 மடங்கு அதிகம் இருக்கின்றது. இலங்கையில் பார்வையிழந்தோர் 80 ஆயிரத்துக்கு அதிகம். இவ்வாறெல்லாம், 2011ம் ஆண்டு அக்டோபரில், இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்ட உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. கண்பார்வையிழந்தோர் தகவல்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து, வழக்கறிஞரும், கண்பார்வையை நடுத்தர வயதில் இழந்தவருமான இலங்கையின் கே.வீ.மகாதேவா விளக்குகிறார்......
கடந்த வெள்ளி, சனி தினங்களில் வத்திக்கானில் பார்வையிழந்தோர் குறித்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. “போதகரே, நான் பார்வை பெற வேண்டும்” என்று இயேசுவிடம் பார்வையிழந்த ஒருவர் முன்வைத்த வேண்டுகோளைக் கருப்பொருளாக வைத்து இக்கருத்தரங்கு நடைபெற்றது. விவிலியத்தில் இத்தகைய மக்கள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பவை மற்றும் பார்வையற்றவர்களுக்கு திருஅவை ஆற்றி வரும் நற்பணிகள் குறித்து இக்கருத்தரங்கில் பேசப்பட்டன. “புத்தம், யூதம், இசுலாம், இந்து என ஒவ்வொரு மதத்திலும் கண்பார்வையற்றோர்” என்ற தலைப்புக்களிலும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கண்தான் உடலுக்கு விளக்கு என்றார் இயேசு. ஆனால், உடல்ரீதியானப் பார்வையிழப்பு ஒருபுறமிருக்க, பலர் கண்ணிருந்தும் குருடராய் அதிலும் குறிப்பாக கண்பார்வை இல்லாதவர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிய வரும்போது மனது கனக்கின்றது. Chen Guangcheng என்ற பார்வையற்ற சீன மனித உரிமை ஆர்வலர் குறித்து இந்நாள்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இளம் வயதிலே கண்பார்வையை இழந்த Chen, சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞர். சீனாவின் ஒரு குழந்தை விதிமுறை, கட்டாயக் கருக்கலைப்புகள், முதிர்ந்த கருக்களை அழித்தல் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். சீனக் கம்யூனிச கட்சியில் மேலோங்கி நிற்கும் ஊழலையும் வன்முறையையும் கண்டித்து வெளிப்படையாகப் பேசி வருபவர் Chen. இதனால் பல ஆண்டுகள் சிறையிலும், வீட்டுக் காவலிலும் இருந்தவர். இவர் இந்த ஏப்ரல் 22ம் தேதி வீட்டுக் காவலிலிருந்து தப்பித்து பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார். ஆனால் அவரது வயதான தாய், மனைவி, மகன், உடன் பிறப்புகள், உறவுகள் என இவரது குடும்பமே சீன அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன. இவரே சீனப் பிரதமர் Wen Jiabao வுக்கு காணொளிச் செய்தி ஒன்றைப் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார். பணிக்குரிய சீருடை அணியாமல், சட்டரீதியாக எவ்வித அனுமதியுமின்றி, சுமார் 70 முதல் 80 அதிகாரிகள் வரை தனது குடும்பத்தினரை அடித்ததாக அதில் சொல்லியிருக்கிறார். அவரது குடும்பம் எதிர்நோக்கும் வேறுபலத் துன்பங்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஊழல்பேர்வழிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் Chen.
அன்பு நேயர்களே, எத்தியோப்பியா, மலேசியா, அயர்லாந்து, ஃபீஜி மற்றும் அர்மேனியா நாடுகளின் திருப்பீடத்துக்கானத் தூதர்களை கடந்த வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய போது, இந்த உலகில் நிலவும் வறுமையின் மற்றொரு வடிவத்தைச் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடவுள் எண்ணமின்றி இருக்கும் ஆன்மீக விழுமியங்கள் குறைபடுவதே இந்த வறுமை என அவர் குறிப்பிட்டிருந்தார். மனிதரில் இந்த வறுமை ஏற்படுத்தும் ஆன்மீக வெற்றிடம், நன்மைக்கும் தீமைக்கும் இடையே தேர்ந்து தெளிவதையும், பொது நலனுக்காகச் சுயநல இன்பங்களைத் துறப்பதையும் கடினமாக்குகின்றன, அத்துடன், தற்போதைய உலகப் போக்கை எளிதில் பற்றிக் கொள்ளவும் செய்கின்றது என்றும் அவர் கூறினார். இந்த உலகில் நிலவும் மிகக் கொடிய வறுமை அன்பின்மையே என்றும், கடுந்துன்ப நேரங்களில் பரிவும் தன்னலமற்ற செவிசாய்ப்பும் மிகுந்த ஆறுதல் தருகின்றன என்றும், பெருமளவான பொருளாதார வளங்கள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் திருத்தந்தை அந்தத் தூதர்களிடம் கூறினார்.
RealAudioMP3 ஆன்மீக வாழ்க்கையில் வெற்றிடம் காணப்படும் போது, கடவுள் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து அந்நியராக்கப்படும் போது, பார்வையிருந்தும் பார்வையற்றவர்களாகவே நாம் வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கையில் ஊழலும் பழியும் பாவமும் வஞ்சகமும் கல்நெஞ்சும் வன்செயல்களும் என எல்லாத் தீமைகளும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. இத்தகையவர் வாழ்க்கையில் ஆழமான இறைப்பற்று இருக்காது அல்லது இறைவன் பற்றிய சிந்தனையே அற்றுப் போயிருக்கும். அன்பிருக்காது, அருளிருக்காது.
புத்தரின் முக்கியமான சீடர்களில் ஒருவர் ஆனந்தர். இவர் புத்தரின் நெருங்கிய உறவினர். புத்தர் ஞானம் பெறுமுன் ஒருநாள் ஆனந்தர் அவரிடம், “நீ ஞானம் பெற்ற பின்னர் குருவாகி விடுவாய், அதனால் இப்போதே உன்னிடம் மூன்று நிபந்தனைகளை முன்வைக்கிறேன்” என்றார். 1. தூங்கும் நேரம் உட்பட நான் எப்போதும் உன்னோடுதானிருப்பேன். 2, போதனை செய்வது உட்பட எந்தக் காரியத்திற்காகவும் எங்கும் யாருடனும் நீ என்னை அனுப்பக் கூடாது. 3, நான் யாரை அனுப்பினாலும் நீ அவர்களுக்கு ஆசீர் தர மறுக்கக் கூடாது. புத்தர் இந்த 3 நிபந்தனைகளுக்கும் தலையசைத்தார். அன்றுமுதல் 42 ஆண்டுகள் புத்தருடன் வாழ்ந்தார் ஆனந்தர். ஆனால் புத்தர் இறக்கும் நாள் வந்த போது ஆனந்தர் வேதனையை அனுபவித்தார். அவர் புத்தரிடம், “உங்களைக் காண வந்த பலர் ஞானம் பெற்று விட்டனர், ஆனால் நான் உங்கள் கூடவே இத்தனை ஆண்டுகள் இருந்தும் ஞானம் பெறவில்லையே” என்றார். அதற்குப் புத்தர், “நீ என்னைவிட மூத்தவன் என்ற நினைவிலேயே இருந்தாய், உனக்கு மட்டுமே நான் உறுதி கொடுத்திருக்கிறேன், நீ என்னுடனே எப்போதும் இருக்கிறாய் என்ற எண்ணம் உனக்குக் கர்வத்தைத் தந்தது. உனது கர்வம், உனது பெருமிதம், மூத்தவன் என்ற மூன்றும் ஞானம் பெறுவதைத் தடுத்து விட்டன” என்றார். புத்தர் இறந்த பின்னர் பேரவை கூட்டப்பட்டது. ஞானம் பெறாத ஆனந்தர் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடும் தியானத்தில் இறங்கினார். ஆழ்ந்த நிலையில் மனம் வருந்தி தேம்பித் தேம்பி அழுதார். மனம் கரைந்த நிலையில் அவரது ஆணவம் அழிந்தது. ஞானம் பிறந்தது ஆனந்தருக்கு.
பெரியோர் சொல்கிறார்கள் : “நான்” என்ற விதையில்தான் “கர்வம்” என்ற மரம் தழைத்து வளர்கிறது. கர்வம் என்ற மரத்தில் தற்பெருமை, அலட்சியம், ஆணவம் போன்ற கிளைகள் வளர்கின்றன. எங்கே செருக்கு அகல்கிறதோ அங்கே மனதை மூடியுள்ள மாயை விலகும்” என்று.
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமிதம் நீர்த்து – இப்படிச் சொல்வது வள்ளுவம்







All the contents on this site are copyrighted ©.