2012-05-07 15:51:11

நேபாளத்தில் இயேசு சபையினரின் 60 ஆண்டு பணி


மே,07,2012. நேபாள கல்வி முறையில் ஒரு புதிய புரட்சியைக் கொணர்ந்தவர்கள் இயேசு சபையினர் என தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் இராம் பரன் யாதவ்.
இயேசு சபையினர் நேபாளத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆற்றி வரும் பணிகளைச் சிறப்பிக்கும் விதமாக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசுத்தலைவர், நேபாள நாடு மத சகிப்புத் தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதுடன், மக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் மதத்தை பின்பற்ற உதவியுள்ளது என்றார்.
1951ம் ஆண்டு நேபாளத்தில் துவக்கப்பட்ட இயேசு சபையினரின் பணி எனும் சிறு செடி இன்று பெரிய மரமாக வளர்ந்துள்ளது என்று கூறிய நேபாள புனித சேவியர் பள்ளி முதல்வர் இயேசு சபை குரு அம்ரித் இராய், இயேசு சபையினரின் வியர்வை மட்டுமல்ல, இரத்தம் சிந்தலும் இவ்வளர்ச்சியில் இடம்பெற்றுள்ளது என்றார்.
நேபாளத்தில் கடந்த 60 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இயேசு சபையினர் அந்நாட்டில், 4 பள்ளிகள், ஒரு சமூகப்பணி மையம், போதைக்கு அடிமையானோர் மறு வாழ்வு மையம், நோயாளிகள் மற்றும் முதியோர் மையம், மனிதவள மேம்பாட்டு மையம், குழந்தைகள்நல மையம், புனித சேவியர் கல்லூரி ஆகியவைகளை நடத்தி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.