2012-05-07 15:47:50

திருத்தந்தையின் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை


மே,07,2012. நாம் என்றும் இயேசுவோடு இணைந்து அவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியம், ஏனெனில் அவரின்றி நாம் எதையும் ஆற்றமுடியாது என இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மையமாக வைத்து தன் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திராட்சைக் கொடியும் அதன் கிளைகளும் என்பதைப்பற்றி இயேசு கூறிய உவமையைக் குறித்து தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இறைவனின் உண்மையான திராட்சைக்கொடியாம் இயேசு, தன் அன்பெனும் தியாகத்தால் நமக்கு மீட்பளித்து நாம் அக்கொடியுடன் இணைக்கப்படுவதற்கான வழியைக் காட்டியுள்ளார் என்று கூறினார். இயேசு தந்தையின் இறையன்பில் நிலைத்திருப்பதுபோல், அவரின் சீடர்களும் இயேசுவோடு ஆழமாக இணைந்திருக்கும்போது, கனிதரும் கிளைகளாக மாறி, பெருமளவு பலன் தருவர் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
கடவுளின்றி மனிதனால் எதுவும் ஆற்றமுடியாது என்பது மனிதனின் சுதந்திரத்தைக் குறித்தக் கேள்வியாக இருக்கிறது என்ற இக்காலப் போக்கையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, கடவுளிடம் நாம் வேண்டும்போது, நம் வேண்டுகோளுக்கு செவிமடுக்கும் இறைவன், நம் பணியை ஆற்றுவதற்கான பலத்தை வழங்குகிறார், அதன் வழி நம் சுதந்திரமும், தெய்வீகச் சக்தியும் நம்மில் வளர்ச்சி காண்கிறது என்ற 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் யோவானின் வார்த்தைகளையும் எடுத்துரைத்தார்.
கிளைகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் தினசரி செபம், அருளடையாளம் மற்றும் பிறரன்பில் பங்கேற்பு போன்றவை மூலம் இறைவனுடன் கொண்டுள்ள ஒன்றிப்பை வளர்த்து, அதன் வழியே வாழமுடியும் என்றார் பாப்பிறை.
மிலான் நகரில் இடம்பெற உள்ள ஏழாவது உலகக் குடும்ப மாநாடு குறித்தும் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, வரும் ஜூன் மாதம் 1 முதல் 3 வரை, மிலான் நகரில் திருப்பயணம் மேற்கொள்ளும்போது அந்த மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதையும் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.