2012-05-07 15:46:52

சுவிஸ் மெய்க்காப்பாளர்களுககுத் திருத்தந்தையின் உரை


மே,07,2012. திருப்பீடத்திற்கான சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் படையில் இணையும் இளையோர் தங்கள் வாழ்வின் சில ஆண்டுகளைத் திருத்தந்தை மற்றும் திருப்பீடப்பணிகளுக்கென அர்ப்பணிப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல் என சுவிஸ் மெய்க்காப்பாளர்களை அவர்களின் குடும்பங்களோடு இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
1527ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி திருத்தந்தையின் உயிரைக்காப்பாற்ற தங்கள் இன்னுயிரை அளித்த சுவிஸ் மெய்க்காப்பாளர்களை இவ்வேளையில் நினைவுகூர்ந்த பாப்பிறை, திருத்தந்தைக்கான அதே விசுவாசப்பாதையில் இன்றைய சுவிஸ் மெய்க்காவலர்களின் பணிகள் தொடர்கின்றன என்று கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதிப்பாடு, இயேசுவின் திருஅவையை அன்பு கூர்ந்து விசுவாசமாயிருத்தல், துணிவும், பணிவும், சுயநலமற்ற போக்கும், உதவும் மனப்பான்மையும் சுவிஸ் மெய்க்காவலர்களின் பணிகள் என கோடிட்டுக்காட்டினார் திருத்தந்தை.
தங்களின் தினசரி வாழ்வில் சந்திக்கும் மக்களை நற்செய்தி காட்டும் பிறரன்புடன் வழிநடத்த, தெய்வீக அன்பெனும் உலைக்களத்தில் நாம் செம்மைப்படுத்தப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய பாப்பிறை, செபித்தல், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல், திருநற்கருணையை மையமாகக் கொண்ட வாழ்வை அமைத்தல் போன்றவைகளையும் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.