2012-05-07 15:56:05

சாஹேல் பகுதி மக்களின் துயர்துடைக்க நடவடிக்கைகள் தேவை


மே,07,2012. நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மேற்கு ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி மக்களின் வாழ்வு நிலைகள் மிக மோசமாக உள்ளதாகவும், உடனடி துயர்துடைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் உலக சமுதாயத்தை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.
ஆப்ரிக்க மக்களின் நிலை குறித்து ஆராய அப்பகுதிக்குச் சென்றுள்ள WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்தின் அதிகாரி Ertharin Cousin செய்தியாளர்களிடம் பேசுகையில், சாஹேல் பகுதியின் இன்றைய நெருக்கடி நிலைகள் குறித்து உலக சமூகம் பராமுகமாய் இருக்க முடியாது என்று கூறினார்.
சாஹேல் பகுதியில் 1 கோடியே 50 இலட்சம் மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியள்ளனர்.
அண்மைக்காலங்களில் தற்போது மூன்றாம் முறையாக சாஹேல் பகுதி மக்கள், பட்டினிச்சாவுகளை எதிர்நோக்குவதாக தன் கவலையை வெளியிட்ட Cousin, தற்போதைய பிரச்சனை, உள்நாட்டுப்போரால் மேலும் சிக்கலாகியுள்ளது என மேலும் கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவ 45 கோடி டாலர்கள் தேவைப்படுவதாக உலக உணவு திட்ட நிறுவனம் கணித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.