2012-05-05 14:48:22

திருத்தந்தை : கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்


மே 05,2012. “உண்மையான கத்தோலிக்கமாக இருக்கும் அறிவுசார்ந்த கலாச்சாரத்தை” வளர்த்துக் கொள்வது அமெரிக்கத் தலத்திருஅவைக்கு இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் 13 வது குழுவை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கத்தோலிக்கத்தின் தனித்தன்மை வலியுறுத்தப்படும் பொழுது அது கிறிஸ்துவின் விடுதலையளிக்கும் உண்மையையும், நற்செய்தியால் உந்தப்பட்ட, முழுவதும் மனிதம் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உரையாடலையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.
இக்காலத்தில் பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் நெருக்கடியைக் களைவதற்கு உதவுவதில் கத்தோலிக்க நிறுவனங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி, புதிய நற்செய்திப்பணியின் ஒரு பகுதியாக இருக்கின்றது என்றும் கூறினார்.
அறிவு மற்றும் நற்பண்புகளால் வாழ்வு முழுவதும் வழிநடத்தப்படுவதற்கு மாணவர்கள் பற்றுறுதிக்கும் அறிவுக்கும் இடையே இருக்கும் நல்லிணக்கத்தை இணைத்துப் பார்ப்பதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.
பற்றுறுதிக்கும் மனித அறிவுக்கும் இடையே இருக்கும் உறவு பற்றிக் கூறும் பொழுது, ஞானத்தை அன்பு செய்வது இறைவனை அன்பு செய்வதாகும் என்று புனித அகுஸ்தீன் கூறினார் என்றும் உரைத்த திருத்தந்தை, கல்வியில் அறிவை மட்டும் வழங்கினால் போதாது, இதயங்களையும் வடிவமைக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இரண்டாவது பெரிய ஆயர் பேரவையாகும். இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.







All the contents on this site are copyrighted ©.