2012-05-03 14:44:18

உரோம் தூய இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை


மே,03,2012. இறைவனைத் தேடும் தாகம் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இருப்பதே அறிவியல் ஆய்வுகள் அனைத்தின் அடிப்படையாக அமைகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோமையில் உள்ள தூய இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்வில் ஆற்றிய உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
"எங்களை உமக்காக உருவாக்கினீர் இறைவா, எனவே உம்மில் நாங்கள் ஒய்வு கொள்ளும்வரை எங்கள் இதயம் ஓய்வதில்லை" என்று புனித அகஸ்தின் கூறிய வார்த்தைகளை மேற்கோளாகச் சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அறிவியலில் மனிதர்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் உண்மையின் ஊற்றாம் இறைவனை அடையும் வரை ஓய்வதில்லை என்று கூறினார்.
தற்போதைய உலகில் அற்புதமான பல அறிவியல் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், அவற்றில் திருப்தி அடையாமல், மனித மனம் இன்னும் ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
விசுவாசமும் அறிவியலும் இணைந்து செல்ல முடியாது என்பது போன்ற ஓர் எண்ணத்தை இன்றைய தொழில் நுட்ப உலகம் உருவாக்கினாலும், இவை இரண்டும் இணைந்து செல்லும்போது இன்னும் பல ஆழமான உண்மைகளை உணர முடியும் என்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் ஒரு சான்று என்று திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.
பிறரன்பை வெறும் வார்த்தைகளாகக் கூறாமல், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் கத்தோலிக்க மருத்துவப் பணி எப்போதும் ஈடுபட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, கருவிலிருந்து கல்லறை வரை உயிர்காக்கும் உத்தமப் பணியில் ஈடுபடுவதே கிறிஸ்தவ மருத்துவப் பணியாளர்களின் அழைப்பு என்று வலியுறுத்தினார்.
தன் உரையின் இறுதியில் அந்த விழாக்கூட்டத்தில் பங்கேற்ற நோயாளிகளைச் சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தன் தனிப்பட்ட செபங்களையும் ஆசீரையும் வழங்குவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.