2012-05-02 15:26:05

இஸ்லாமிய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை அரசு இழந்துவிட்டது - நைஜீரிய ஆயர்கள் கண்டனம்


மே,02,2012. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 29 கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர், மற்றும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Kaigamaம், Abuja பேராயர் John Onaiyekanம் இந்த வன்முறையைத் தடுக்க அரசு சக்தியற்று இருப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.
நைஜீரியாவில் உள்ள அரசு பிளவுபட்டு இருப்பதால், இஸ்லாமிய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழந்துள்ளது என்று பேராயர் Onaiyekan சுட்டிக் காட்டினார்.
கடந்த ஞாயிறன்று பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் பல இளையோர் இறந்துள்ளனர் என்பதைக் குறித்துப் பேசிய Jos பேராயர் Kaigama, நாட்டின் வருங்கால சந்ததியை அழிக்க நினைக்கும் வன்முறையாளர்களின் போக்கு முற்றிலும் அறிவற்ற ஒரு செயல் என்று கூறினார்.
நைஜீரியாவில் பல வன்முறைத் தாக்குதல்களுக்குக் காரணாமாய் இருக்கும் Boko Haram என்ற ஓர் அடிப்படைவாதக் குழுவினர் கிறிஸ்தவர்களை நைஜீரியாவில் இருந்து முற்றிலும் வேரறுக்கப் போவதாக ஏப்ரல் மாதத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்களில் நடப்பு ஆண்டின் நான்கு மாதங்களில் 450 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.