2012-05-02 15:25:17

இளையோரின் விசுவாசமும், கிறிஸ்தவ வாழ்வும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கும் - இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர்


மே,02,2012. கடவுளும், மதமும் தேவையில்லை என்ற நிலை வளர்ந்துவரும் உலகில் இளையோராகிய உங்கள் விசுவாசமும், கிறிஸ்தவ வாழ்வும் ஒரு மாற்று சாட்சியாக விளங்கும் என்று ஐரோப்பிய ஆயர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
இச்செவ்வாயன்று உரோம் நகரில் நடைபெற்ற ஐரோப்பியப் பல்கலைக் கழக மாணவ மாணவியரது கருத்தரங்கின் ஆரம்பத் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Bagnasco இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தூதர் பேதுரு மறைசாட்சியாக உயிரைத் தந்த உரோம் நகரில் நீங்கள் இக்கருத்தரங்கிற்காகக் கூடி வந்திருப்பது உங்கள் விசுவாசத்தைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கர்தினால் Bagnasco மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்துவரும் வேளையில், உங்கள் கண்ணோட்டத்தையும், கலாச்சார சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதுபோல், உங்கள் விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் தன மறையுரையில் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.