2012-05-02 15:24:48

அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்பு முறையைப் புதுப்பிக்கும் ஆணை


மே02,2012. இன்றைய நவீன உலகின் சூழலில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் ஆதரவை மேலும் சிறந்ததாக அமைக்கும் நோக்கத்தில் அந்நிறுவனத்தின் சட்டரீதியான அமைப்புமுறையைப் புதுப்பிக்கும் ஆணையை இப்புதனன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் கடந்த 61 ஆண்டுகளாகச் செய்து வரும் மிகவும் தகுதிமிக்கப் பணிகள், குறிப்பாக அண்மை ஆண்டுகளில் அது அடைந்துள்ள வளர்ச்சியை வைத்து அந்நிறுவனத்துக்கு மேலும் ஆதரவு வழங்கும் நோக்கத்தில் இவ்வாணை வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாணையை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அந்நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையில் பிறரன்பு நடவடிக்கையின் சலுகை பெற்ற கருவியாக இருந்து வருகிறது அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம். உலகில் சண்டைகள் இடம் பெறும் இடங்களில் திருஅவையின் தோழமை உணர்வை வெளிப்படுத்தவும், உலகில் அவசரகால உதவிகளைத் செய்வதற்குமென இத்தகைய நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென்று, இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களுக்குப் பின்னர் திருத்தந்தை 12ம் பத்திநாதர் விரும்பினார். அதன் பயனாக இதன் 13 நிறுவுனர்களைக் கொண்டு 1951ம் ஆண்டில் இதன் முதல் பொதுக் கூட்டம் நடந்தது. இந்நிறுவனம், 1957ம் ஆண்டில் Caritas Internationalis என்ற பெயருடன் செயல்படத் தொடங்கியது. 2004ம் ஆண்டில் திருஅவை சட்டப்படி அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.