2012-05-01 15:44:01

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 119


RealAudioMP3 குரூஸ் திவாகரன், DGS தினகரன், மோகன் சி. லாசரஸ் போன்ற பலர் வழிநடத்தும் தூய ஆவியார் செபக்கூட்டங்களில் பலருடைய சாட்சியங்களைக் கேட்டிருக்கிறேன். மனம்போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் வாழ்விலே, திடீரென இறைவார்த்தை அற்புதவிதமாக அவர்களைத் தொட்டதாகவும், அதன்படி அவர்கள் முற்றிலுமாக மாறிவிட்டதாகவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள். இவையெல்லாம் அவர்களது வாழ்க்கை அனுபவம். இதேபோன்று தன் வாழ்க்கை முழுவதுமே இறைவார்த்தையின் செயல்பாடு இருந்தது என்பதை உணர்ந்து, எவ்வாறெல்லாம் இறைவார்த்தை தன் வாழ்வில் செயலாற்றியது, என்னென்ன செய்தது, அதை அவர் எப்படி பார்க்கிறார் என்று சொல்வதுதான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடல் 119. ஆசிரியரின் வாழ்வை இறைவார்த்தை எவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது இத்திருப்பாடல்.
இத்திருப்பாடல் 176 சொற்றொடர்களைக் கொண்டது. 150 திருப்பாடல்களில் இதுதான் மிக நீளமானது. எபிரேய அகர வரிசையிலே எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு எட்டாவது வசனத்திலும் ஓர் எபிரேய எழுத்தைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் முழுவதும் ஆசிரியர் திருச்சட்டத்தைப்பற்றிப் பெருமையாகப் பேசுகின்றார். சட்டம் என்று சொன்னதும், நமது அன்றாட வாழ்க்கையின் விதிமுறை மற்றும் ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய தொகுப்பு என நினைக்கத் தேவையில்லை. இத்திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரை திருச்சட்டம் என்பது இறைவனுடைய வார்த்தை. இறைவார்த்தை தன் வாழ்வில் செய்தது என்னென்ன என்பதைப் பட்டியலிடுகிறார். எனவே இன்றைய விவிலியத்தேடலில், நம் வாழ்வில் இறைவார்த்தையின் செயல்பாடுகள் என்பதுபற்றிச் சிந்திப்போம். இன்றைய சிந்தனையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் பகுதியில இறைவார்த்தையின் செயல்பாடுகள் பற்றி சிலவற்றையும், இரண்டாம் பகுதியில், நம்முடைய வாழ்வும், இறைவார்த்தையும் என்றும் சிந்திப்போம்.

இறைவார்த்தையின் செயல்பாடுகளில் முதலாவது இறைவார்த்தை நமக்கு ஆசி அளிக்கிறது. இத்திருப்பாடலின் முதல் மூன்று சொற்றொடர்களே இதற்கு சான்றுகள்.
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.
இரண்டவாதாக, இறைவார்த்தை நம்மை தூயவர்களாக்குகிறது. சொற்றொடர் 9
இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

இறைவார்த்தையை வாசிக்கும்போது அது நம்மை ஆட்கொள்கிறது. நம்மில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு விவிலியத்திலிருந்தே ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். அரசர் 2ம் நூல் 21 மற்றும் 22ம் பிரிவுகள்.
அக்காலத்தில் இஸ்ரயேலின் அரசன் மனாசே. அவன் மூதாதையருக்கு இறைவன் கட்டளைகளையும் இறைவனோடு அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கையையும் உதறித்தள்ளி மனம்போன போக்கில் வாழ்ந்து வந்தான். மனாசேயின் மகனான ஆமோனும் தன் தந்தை வழியில் நடந்தான். அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்; தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான். அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.
இதனால் அரண்மனையிலிருந்தவர்கள் ஆமோனை அரண்மனையிலே கொலை செய்து விட்டு, ஆமோனுடைய மகன் யோசியாவை அவனுடைய எட்டாவது வயதில் அரசராக்கினர். யோசியா 31 ஆண்டுகள் எருசலேமை ஆட்சி செய்தான். தன் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அப்போது குருவாக இருந்த இலக்கியாவிடம், சப்பான் என்னும் தன் எழுத்தனை அனுப்பி கோவில் பராமரிப்பிற்காக வசூலித்தப் பணத்தைப் பணியாளர்களிடம் கொடுக்க ஆணைப் பிறப்பித்தான். அப்போது அங்கு சென்ற சப்பானிடம், குரு இலக்கியா கோவிலில் தான் ஒரு நூலைக் கண்டெடுத்ததாகச் சொல்லி ஒப்படைக்கிறார். அதை சப்பான் அரசன் யோசியாவிற்கு வாசித்துக் காண்பிக்கிறார். அதை வாசிக்கக் கேட்டதும் யோசியா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டார். நம் மூதாதையர்கள் ஆண்டவரது வழியை விட்டு தங்கள் விருப்பத்திற்கு வாழ்ந்திருக்கின்றனர். எனவே ஆண்டவரின் சினம் நம்மீது உள்ளது. எனவே மீண்டுமாக ஆண்டவரது விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். மக்கள் அனைவரும் ஆண்டவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதாக உடன்படிக்கை செய்து கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். இறைவார்த்தை அதை வாசிப்போரைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு.

அடுத்ததாக, இறைவார்த்தை நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நான் சொல்ல விரும்புவது புனித லொயோலா இஞ்ஞாசியார். ஸ்பெயின் நாட்டில் உயர்குடும்பத்தில் பிறந்த இவர், நாட்டின் மிகப்பெரிய தளபதியாக உருவாக ஆசைப்பட்டார். ஆனால் போரில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் படிப்பதற்காக புத்தகம் கேட்டபோது அவருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களே வழங்கப்பட்டன. அதில் லுடால்ப் என்பவர் எழுதிய இயேசுவின் வாழ்வு என்ற புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு சிறந்த தளபதியாகும் தன் கனவை விட்டுவிட்டு, ஆன்மீக வாழ்வில் ஆர்வம் கொண்டவராக மாறினார். இயேசு சபையை தோற்றுவித்தார். அவரைப் பின்தொடர்ந்த பிரான்சிஸ் சேவியருடைய வாழ்வின் மாற்றத்திற்குக் காரணமாயிருந்ததும் இறைவார்த்தையே. மத்தேயு16: 26
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

இறைவார்த்தை ஞானத்தைக் கொடுக்கிறது. நம் வாழ்க்கைக்குத் தேவையான வழியைக் காட்டுகிறது. நாம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் குழப்பமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். புதிய முடிவுகளை எடுக்கும்போதும் நாம் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளைச் சந்திக்கும்போதும் நாம் செல்கின்ற பாதை சரியானதா என சிந்தித்து சோர்வடைகிறோம். இதைப்போன்ற தருணங்களில் ஆண்டவரது வார்த்தை தனக்கு வழிகாட்டியதாக ஆசிரியர் சொல்கிறார்.
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!
இதேபோல இறைவார்த்தையைப் பற்றி ஆசிரியர் திருப்பாடல் முழுவதும் சொல்கிறார். நாமும் பல்வேறு விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நம் சிந்தனையின் இரண்டாம் பகுதிக்கு கடந்து செல்வோம். இன்றைய வேகமான வாழ்வு சற்று நின்று நம் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என சிந்தித்து பார்க்க அனுமதிப்பதில்லை. இப்படியே போனால், ஆற்றிலே தண்ணீர் அடித்து செல்வதைப் போன்று நம் வாழ்வும் அடித்துச் செல்லப்பட்டுவிடும். குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்துவதைப் போல நம் வாழ்வையும் நிறுத்த வேண்டும். அதற்கு இறைவார்த்தை நமக்கு மிகவும் உதவிசெய்கிறது.
நம் வாழ்வு நாம் விரும்புகின்றவாறு செல்கின்றதா? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? எதற்கு அதிக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறோம்? நம்மைச் சுற்றியுள்ள சூழல் என்ன? நமது குடும்பம், நண்பர்கள், உறவினர்களோடு நமது உறவுநிலைகள் எப்படி இருக்கின்றன? இவற்றையெல்லாம் இறைவார்த்தை ஒளியில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் நாம் விரும்புகின்ற நல்ல மனிதர்களாக வாழ முடியாது. நம்மில் எந்த மாற்றமும் நிகழாது. இதைத்தான் சொற்றொடர் 59 சொல்கிறது.
நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்; உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.

ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை வாசித்துத் தியானிக்க வேண்டும். இறைவன் எனக்கு என்ன சொல்கிறார் என்பதை நாம் தேட வேண்டும். இறைவார்த்தையைத் தியானிக்காவிட்டால் நம் வாழ்வில் ஒரு மாற்றமும் ஏற்படாது. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் நம்மில் என்றுமே ஏற்படாது.
விவிலியம் வாசிக்கும்போது இறைவனுடைய செயல்களைக் கண்டு பிரமிக்கிறோம். இறைவனுடைய படைப்பு, அதைக்காக்கும் அவரது பொறுப்பு, அவரது வல்ல செயல்கள், வழிநடத்தும் முறைகள் இவைகளெல்லாம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அதன்பிறகு விவிலியத்தை வாசித்து, தங்கள் வாழ்வையை மாற்றிக்கொண்ட சிறந்த மனிதர்களை, புனிதர்களைப் பற்றி வாசிக்கும்போதும், கேட்கும்போதும் நமக்கு மெய்சிலிர்க்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்த கடவுள் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நம் வாழ்வில் இறைவன் செய்கின்ற காரியங்களை நாம் உணர்கிறோமா? நம் வாழ்வின் சாதாரண அல்லது மிகப்பெரிய காரியங்களில் இறை வல்லமையை உணர்கிறோமா? நம் வாழ்வில் இறைவன் எவ்வாறு செயலாற்றுகிறார் என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும் போதுதான் அவர் நமக்கு ஆற்றுகின்ற மகத்தான செயல்களைப் புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக,
நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்;
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.

நீர் என்னை தண்டித்து விட்டீர் என முறையிடாமல் தன் தவற்றை ஏற்றுக்கொள்கிறார். தன் தவறை ஏற்றுக்கொண்டதோடு அவர் தன்னை தண்டித்தது சரியே எனவும் புரிந்து கொள்கிறார். பின் அதற்கும் ஒரு படி மேலே சென்று, அவ்வாறு என்னை தண்டித்தது எனது நன்மைக்கே என்று சொல்கிறார். எவ்வளவு அருமையான புரிதல். நமக்கு நேருகின்ற துன்பங்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம். நமது துன்பங்கள் இறைவன் நம்மைச் சரிப்படுத்த உதவும் கருவிகள் என்ற எண்ணம் நமக்கு உண்டா?
இத்திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரது நியமங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார். பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னும் சோர்ந்து போகாமல் இறைவனிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறார். 12வது சொற்றொடர்
எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

ஆனால், நம் நடைமுறை வாழ்வில் நடப்பது என்ன? விவிலியம் வாசிக்கத் துவங்கும்போது ஆர்வமாகத் துவங்குகிறோம் ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவிலியத்தில் நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடுகிறோம். ஒவ்வொரு முறையும் விவிலியம் வாசிக்கும்போதும் இறைவன் நம்மோடு பேசுகிறார். எனவே இறைவனுக்குச் செவிமடுக்க நாம் எப்போதும் தாயாராக இருக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.