2012-05-01 15:43:47

கவிதைக் கனவுகள் - மாந்தர்களே, மாறுங்கள்...


தமிழ் நண்பர்கள் என்ற இணையதளத்தில் Raja.Tyagarajan எழுதிய ‘மாந்தர்களே, மாறுங்கள்... என்ற கவிதையின் சில வரிகள்...

தூண்டிலிலே தொக்கிநிற்கும் சுவைமிக்கத் துண்டுணவை
வேண்டியதால் மீன்கொண்ட வேதனையை எண்ணாது,
காண்பதெல்லாம் கொள்வதுவும் கண்போக்கில் களிப்பதுவும்
மாண்பெனவே மயங்குகின்ற மானிடரே மாறுங்கள்!

உள்ளத்தில் உருவாகும் உலையனைய உணர்வுகளைக்
கள்ளங்கள் கருக்கொண்ட கருப்புநிறக் கனவுகளைத்
துள்ளுகின்ற துடிப்புடனே துய்ப்பதுதான் சுகமென்றே
அள்ளியள்ளி அனுபவிக்கும் அன்பர்களே மாறுங்கள்!

எளிதாக எதுவுமிங்கே இலவசமாய் வருவதில்லை
சுளுவாக உன்கழுத்தில் தொடையல்கள் விழுவதில்லை
தெளிவாகச் சிந்தித்துத் திடமாகத் தேர்ந்தெடுத்து
நெளிவில்லா நோக்குடனே நேர்மைக்கு மாறுங்கள்!

உடலுழைப்பில் உருவாகும் உயர்வான ஒற்றுமையே
உடமையென உலகிலுள்ள உயிர்களெலாம் உணர்கையிலே
கடமைகளும் கருத்தேறிக் கண்ணிமைப்பில் வளர்ச்சிகளும்
நடக்குமென்ற நன்னெறிக்கு நலுங்காமல் மாறுங்கள்!








All the contents on this site are copyrighted ©.