2012-04-30 15:27:36

திருப்பீட சமூக அறிவியல் கழகக் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் செய்தி


ஏப்ரல்,30,2012. திரு அவையின் சமூகப் படிப்பினைகளுக்கு சிறப்புப் பங்கீட்டை வழங்கிய திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய Pacem in Terris என்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் திருப்பீட சமூக அறிவியல் கழகக் கூட்டத்திற்குத் தன் வாழ்த்துக்களை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் 18வது நிறையமர்வுக் கூட்டத்தை நடத்தும் இத்திருப்பீட அவையின் தலவர் பேராசிரியர் மேரி ஆன் கெளண்டனுக்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளத் திருத்தந்தை, வல்லரசுகளிடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் வெளியிடப்பட்ட சுற்றுமடல் Pacem in Terris, நீதியும் அமைதியும் எல்லாக்காலத்திலும் சமூகத்தின் மற்றும் நாடுகளின் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற அழைப்பை விடுப்பதாக இருந்தது என்றார்.
கடந்த 50 ஆண்டுகளில் உலக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அமைதி மற்றும் நீதிக்கான சவால்களை எதிர்கொள்வதில் அத்திருத்தந்தையின் படிப்பினைகள் இன்றும் உதவிபுரிபவைகளாக உள்ளன என்றார் திருத்தந்தை.
"நீதியின்றி அமைதியில்லை, மன்னிப்பின்றி நீதியில்லை" என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வார்த்தைகளையும் தன் வாழ்த்துச் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.