2012-04-30 15:27:24

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்ரல்,30,2012. இறைவன் மனிதர்களுக்கு எப்போதும் அழைப்பை விடுத்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் நாம்தான் பலவேளைகளில் அதற்குச் செவிமடுப்பதில்லை என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தேவ அழைத்தலுக்கான செப நாளான இஞ்ஞாயிறன்று ஒன்பது பேரை குருக்களாக திருநிலைப்படுத்திய திருப்பலிக்குப்பின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு அல்லேலுயா வாழ்த்தொலி உரை வழங்கிய பாப்பிறை, உலகின் மேலோட்டமான பல ஒலிகளால் நம் கவனம் திரும்பியுள்ளதாலும், இறைவனின் குரலுக்கு செவிமடுப்பதால் நம் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற தவறான அச்சத்தாலும் நாம் அவர் குரலுக்கு செவிமடுப்பதில்லை என்றார்.
நம் துன்பகரமான வேளைகளில் பலத்தை வழங்கும் இறை அன்பு சுவாசிக்கப்படும் முதலிடம் குடும்பமே என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளால் விதைக்கப்பட்ட அனைத்து தேவ அழைத்தல் விதைகளும் தோட்டத்தில் முளைத்து மிகுந்த பயன் தரவேண்டும் என அனைவரும் செபிக்குமாறும் தன் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது அழைப்பு விடுத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.