2012-04-30 15:33:33

ஆப்ரிக்காவில் நடைபெற்றுள்ள கோவில் தாக்குதல்களுக்குத் திருப்பீடப் பேச்சாளரின் கண்டனம்


ஏப்ரல்,30,2012. நைஜீரியாவிலும் கென்யாவிலும் அண்மையில் கிறிஸ்தவ மத வழிபாடுகளின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகக் கொடூரமானவை என தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருப்பீடப் பேச்சாளர்.
அனைவருக்கும் அமைதியையும் அன்பையும் அறிவிக்கும் ஒரு மதம் அமைதியான முறையில் தன் வழிபாட்டுக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது இடம்பெற்ற இத்தாக்குதல்களினால் துன்புறும் மக்களுடன் திருஅவை தன் அருகாமையை அறிவிக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் இயேசுசபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இக்கொலைகள் மீண்டும் கொலைகளுக்கே இட்டுச்செல்லும் வழிகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல், மதங்கள் ஒன்றையொன்று மதிக்கவும், மக்கள் அமைதியில் வாழவும் உதவும் வழிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என மேலும் கூறியுள்ளார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
நைஜீரியாவின் Kano நகர் பல்கலைக்கழக வளாகத்தின் ஞாயிறு வழிபாட்டுக் கொண்டாட்டங்களின்போதும் Maiduguri நகர் கிறிஸ்தவக் கோவிலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல்களிலும் 21 கிறிஸ்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கென்ய தலைநகர் கோவிலில் ஞாயிறு வழிபாட்டின்போது குண்டு வீசி தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.