2012-04-28 14:33:45

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்டதூரம் நடந்து, தங்கள் கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அலெக்சாண்டர் அத்தளபதிகளின் விசுவாசத்தைப் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது." என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் நீரைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில்... முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர். நல்லாயன் ஞாயிறென்று அழைக்கப்படும் இந்த ஞாயிறு, இறை அழைத்தலுக்கு செபிக்கும் நாள் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இன்றையத் தலைவர்களைப பற்றி எண்ணிப் பார்க்கவும், வருங்காலத் தலைவர்களுக்காகச் செபிக்கவும் இறைவன் நமக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்புக்காக முதலில் அவருக்கு நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ள பகுதி யோவான் நற்செய்தியின் 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தியின் 9ம் பிரிவில் பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புதுமையின் இறுதியில் எழும் ஒரு காரசாரமான விவாதத்தில் இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர் பரிசேயர்கள். அவர்களுக்குப் பதில்சொல்லும் வகையில் இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாகச் சித்தரிக்கிறார். அது மட்டுமல்ல, ஆடுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் திருடர், கொள்ளையர், கூலிக்கு மேய்ப்பவர் இவர்களுடன் தன்னை ஒப்புமைப்படுத்தியும் பேசுகிறார் இயேசு. உண்மையான ஆயனின் குணங்களை இயேசு விவரிக்கும் ஒரு சில வரிகள் நமக்கு இன்றைய நற்செய்திப் பகுதியில் தரப்படவில்லை எனினும், நல்லாயனையும், இறை அழைத்தலையும் சிந்திக்கும்போது, இயேசு கூறும் இந்த முக்கியமான வரிகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தப் பகுதியை இப்போது கேட்போம்:

யோவான் 10: 3-4
நல்ல ஆயன் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.
நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பதும், தன்னைப் பின்தொடரும் ஆடுகளுக்கு முன்சென்று வழிகாட்டுவதும் நல்ல ஆயனின் முக்கிய குணங்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம் அவரது பெயர்... ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவு, பிணைப்பு உணர்ந்துபார்க்க வேண்டிய ஓர் உண்மை. பல இல்லங்களில், வளர்ப்பு மிருகங்களுக்கும் பெயர் தந்து செல்லமாய் அவற்றை அழைப்பது, உறவை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சிதானே...
மக்கள் கணக்கெடுக்கும் ஓர் அலுவலர் ஓர் இல்லத்தலைவியைச் சந்தித்த கதை நினைவுக்கு வருகிறது. கணக்கெடுக்க வந்தவர் அந்த இல்லத்தலைவியிடம், "வீட்டில் எத்தனை பேர்?" என்று கேட்டார். இல்லத்தலைவி அவரிடம், "வீட்டில் டெய்சி, டேவிட், சூசன், வில்லியம், ஹாரி, ஜெப்ரி, எல்லாரும் இருக்கிறார்கள்... இன்னும், நாய்க்குட்டி டாமியும், பூனைக் குட்டி ரோசியும் உள்ளன." என்று ஒரு பட்டியலைத் தந்தார். கணக்கெடுக்க வந்தவர், "நாய், பூனை இவையெல்லாம் வேண்டாம். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள்." என்றார். மீண்டும் அந்தப் பெண், "வீட்டில் டெய்சி, டேவிட், சூசன், வில்லியம், ... " என்று ஆரம்பித்தார். கணக்கெடுக்க வந்தவர் இடைமறித்து, "அம்மா, எனக்கு இந்தப் பெயரெல்லாம் தேவையில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் எண்ணிக்கை." என்றார். இல்லத்தலைவி அவரிடம், "எனக்கு அவர்கள் பெயர்கள் மட்டும்தான் தெரியும். அவர்களது எண்ணிக்கை தெரியாது." என்றார். ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைப்பதில் கிடைக்கும் உறவும், நிறைவும் எண்ணிக்கையில் கிடைக்காது.

இதற்கு நேர் மாறாக, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, யூதர்களின் தனித்தன்மையை அழிப்பதற்கு நாத்சி வதைமுகாம்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நம்மை வேதனையில் ஆழ்த்துகின்றன. வதைமுகாம்களுக்கு வந்துசேரும் யூதர்களின் மனிதத்தன்மையை அழிக்கும் முதல் முயற்சி அவர்கள் பெயர்களை அழிப்பது. வதைமுகாம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இன்றிலிருந்து நீங்கள் அனைவரும் எண்கள். உங்களுக்கென்று வேறு தனித்துவம் எதுவும் இல்லை. உங்களுக்குப் பெயர்கள் இல்லை. உங்களுக்குத் தரப்படும் இந்த எண்ணைத் தவிர உங்கள் சுய அடையாளம் என்று வேறு எதுவும் இல்லை." (“From now on, you are all numbers. You have no identity. You have no name. All you have is a number. Except for that number you have nothing.”)

நாம் வாழும் காலத்தில் எண்களுக்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வைப் பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து நமது முக்கியமான அடையாளங்கள் எண்களில் சிக்கிக்கொள்வதை நாம் அனைவரும் உணர்ந்து வருகிறோம். ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம் என்று எத்தனை எண்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல்தர நாடுகள் என்று முன்னேற்றம் கண்டிருக்கும் நாடுகளில் ஒருவரது வாழ்வே அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்துவிட்டால், அவரது எண்களை அவர் மறந்துவிட்டால், ஒருவர் தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு. நம் குழந்தைகள், நண்பர்கள் இவர்களது பெயர்கள் மறக்கப்பட்டு அவர்களது செல்லிடப் பேசியின் எண், அவரது கிரெடிட் கார்ட் எண் என்று எண்களே நமது நினைவையும் மனதையும் நிறைக்கப்போகும் காலம் மிக நெருங்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு. பெயர் சொல்லி அழைத்து உறவுகளை வளர்க்கும் வழிகளை, உறவுகளை ஆழப்படுத்தும் வழிகளை நாம் கண்டுகொள்ள, நல்லாயன் நமக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

தலைவனைத் தொடரும் தொண்டர்கள் ஆயிரமாய்ப் பெருகினாலும், அவர்களை எண்ணிக்கையாகக் கருதாமல், ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாய் எண்ணி, அவர்களது பெயர்சொல்லி அழைக்கும் தலைவனே, உண்மைத் தலைவன். நெப்போலியன் தன் வீரர்கள் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்து, அவர்களைப் பெயர்சொல்லியே அழைத்ததாக வரலாறு சொல்கிறது. இப்படி ஆயிரமாயிரம் பெயர்களை நினைவில் பதிப்பதற்கு அசாத்திய நினைவுத்திறன் இருந்தால் மட்டும் போதாது. தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மதித்து, அவர்கள்மீது ஈடுபாடுகொள்ளும் மனமும் இருந்தால்தான் பெயர்கள் மனதில் பதியும்.

பெயர் சொல்லி பாசமாய் அழைத்தல், முன்னே சென்று ஆடுகளை வழிநடத்துதல் ஆகிய நற்பண்புகளுடன் ஆயனின் மற்றொரு முக்கியமான குணத்தையும் இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார்.
யோவான் 10: 14-15
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

நல்லாயனின் ஒரு முக்கியமான குணம்... ஆடுகளுக்காகத் தன் உயிரையேத் தருவது. எந்த ஒரு சூழலிலும் தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் நூறாம் ஆண்டு நினைவு இரு வாரங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இந்த விபத்தைக் கொண்டாடுவதா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. ஆயினும், இந்த விபத்தின்போது வெளிப்பட்ட ஒரு சில தியாகச் செயல்களைக் கொண்டாடாமல் இருக்க முடியாது. அவற்றில் ஒன்று Thomas Byles, Juozas Montvila, Benedikt Peruschitz என்ற மூன்று குருக்களைப்பற்றியது. கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று குருக்களும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்கள் பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களைப் பெருமையுடன், நன்றியுடன் இன்றும் எண்ணி வருகின்றனர். ஆங்கலிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கராக மாறிய Thomas Byles என்ற அந்த குருவைப் பற்றி புனித பத்தாம் பத்திநாதர் குறிப்பிட்டபோது, அவரை ஒரு மறைசாட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் இக்குரு பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த St Helen கோவிலில் இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள ஒரு வண்ணக்கண்ணாடி சன்னலில் (stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள மற்றொரு உண்மைச் சம்பவம் இது. கொரியாவில் நடந்துவந்த போரின் உச்சகட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரன், இறப்பதற்கு முன், ஒரு குருவைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டான். அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரன், "நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்." என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவனுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவைப்போல் இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.