2012-04-28 14:59:47

ஐ.நா.பொதுச் செயலர் : வேதிய ஆயுதங்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்


ஏப்ரல்28,2012. இப்பூமியில் துன்பங்களையும் இறப்புக்களையும் ஏற்படுத்தும் கருவிகளை ஒழிக்கும் நடவடிக்கையைத் தாமதப்படுத்துவதற்கு எந்தவிதச் சாக்குப்போக்கும் சொல்லத் தேவையில்லை என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வேதிய ஆயுதப் போரில் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஏப்ரல் 29 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், இந்த மனிதத்தன்மையற்ற ஆயுதங்களுக்குப் பலியானவர்களை நினைக்கும் இத்தினத்தில் இவ்வுலகிலிருந்து இவற்றை முழுவதுமாக ஒழித்துவிட உறுதி எடுப்போம் என்று கேட்டுள்ளார்.
வேதிய ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் இவ்வாண்டில் நிறைவடைகின்றது என்றும், உலகின் 98 விழுக்காட்டு மக்களைக் கொண்டிருக்கும் 188 நாடுகள் இவ்வொப்பந்தத்தில் உறுதியாக இருக்கின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
அதேசமயம், இதில் கையெழுத்திடாத 8 நாடுகள், தாமதமின்றி விரைவில் கையெழுத்திடுமாறும் அவர் கேட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.