2012-04-27 15:10:58

திருப்பீடக் குழு : பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் கடமையைக் கொண்டிருக்கிறார்கள்


ஏப்ரல்,27,2012: குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் கடமையைக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர்களேயன்றி அரசுகள் அல்ல என்று திருப்பீட பிரதிநிதிகள் குழு ஐ.நா.வில் வலியுறுத்தியது.
மக்கள் தொகையும், முன்னேற்றமும் குறித்து ஐ.நா.வில் இவ்வாரத்தில் நடைபெற்று வரும் 45வது அமர்வில் உரையாற்றிய திருப்பீட பிரதிநிதிகள் குழு, வளர்இளம் பிள்ளைகள் மற்றும் இளையோர் குறித்த விவகாரங்களில் பெற்றோர் மற்றும் குடும்பங்களின் கடமைகளைக் கோடிட்டுக் காட்டியது.
உலகில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் கத்தோலிக்கப் பள்ளிகள் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அக்குழு, தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதில் முக்கிய கடமையைக் கொண்டிருக்கும் பெற்றோர், பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையும் கடமையும் மதிக்கப்படுமாறும் வேண்டுகோள் விடுத்தது.
உலகின் இளையோரில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர், இவர்களில் 40 விழுக்காட்டினர் வேலையின்றி உள்ளனர், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இளையோரின் கல்வியறிவு விகிதம் 80 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கின்றது என்றும் அத்திருப்பீடக் குழு கூறியது.
சமமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் கல்வி முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்று அத்திருப்பீடக் குழு மேலும் கூறியது.
நாடுகள் தங்களது தேசிய வளர்ச்சித்திட்ட கொள்கைகளிலும் திட்டங்களிலும் இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்துமாறும் ஐ.நா.அவையில் வலியுறுத்தியது அத்திருப்பீடக் குழு.








All the contents on this site are copyrighted ©.