2012-04-26 15:06:23

வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட்டது குறித்து ஆராய கர்தினால்கள் குழு


ஏப்ரல்,26,2012. திருப்பீடத்தின் சில இரகசிய ஆவணங்கள் அண்மைக்காலத்தில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வெளியிடப்பட்டு சமூகத்தொடர்புச் சாதனங்களில் விவாதிக்கப்பட்டது குறித்து ஆராய கர்தினால்களைக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது குறித்து விசாரித்து, அதனால் எழுந்துள்ள தப்பெண்ணங்களை மாற்றுவதற்கு உதவ உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவின் தலைவராக கர்தினால் Julián Herranzம் அக்குழுவின் உறுப்பினர்களாக கர்தினால்கள் Jozef Tomko மற்றும் Salvatore De Giorgiம் செயல்படுவர்.
திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு இவ்வாரம் செவ்வாயன்று கூடி, தங்கள் ஆய்வுப்பணிகளுக்கான கால அட்டவணை மற்றும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தது.
வத்திக்கான் நிதிநிலை குறித்து பேராயர் Carlo Maria Vigano தன் கருத்துக்களை வெளியிட்டு எழுதிய கடிதம், திருப்பீடச்செயலருக்கும் மிலான் கர்தினாலுக்கும் இடையே கத்தோலிக்க மருத்துவமனை குறித்து இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் போன்ற சில இரகசிய ஆவணங்கள் எவ்வாறு பத்திரிகையாளர் கைகளுக்குச் சென்றன என்பது குறித்தும், இதற்கான பதில்மொழிகள் குறித்தும் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு ஆய்வு செய்யும்.








All the contents on this site are copyrighted ©.