2012-04-25 14:48:48

வளர்இளம் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு யுனிசெப் அழைப்பு


ஏப்ரல்25,2012. வன்முறை, நோய்கள், கல்வியறிவின்மை ஆகியவற்றினின்று வளர்இளம் பிள்ளைகள் பாதுகாக்கப்படுமாறு யுனிசெப் நிறுவனம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சாலை விபத்துக் காயங்கள், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரங்கள், தற்கொலை, எய்ட்ஸ் மற்றும் வன்முறையாலும் ஆண்டுதோறும் சுமார் 14 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் இறக்கின்றனர் என்று கூறும் யுனிசெப் நிறுவனம், இந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது.
“சிறார் முன்னேற்றம் : வளர்இளம் பிள்ளைகள் குறித்த அறிக்கை” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், உலகில் பரவலாக 1990ம் ஆண்டிலிருந்து ஆரம்பக் கல்வி பெறும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் இந்நிலையைக் காண முடியவில்லை என்றும் கூறுகிறது.
வளர்இளம் பிள்ளைகளே உலகின் வருங்காலம் என்பதை நினைவுபடுத்தியுள்ள இவ்வறிக்கை, உலகின் 120 கோடி வளர்இளம் பிள்ளைகளில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
10க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் குறித்த விபரங்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்று கூறும் இவ்வறிக்கை, சுமார் 22 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் எய்ட்ஸ் நோயாளிகள், இவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கிறது.
வளர்ச்சி குன்றிய நாடுகளில், 15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஆண்களில் நான்கில் ஒரு பாகத்தினரும், பெண்களில் மூன்றில் ஒரு பாகத்தினரும் எழுத்தறிவற்றவர்கள் என்றும் யுனிசெப் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.