2012-04-25 14:46:07

சூடானும் தென் சூடானும் போரைத் தவிர்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் வேண்டுகோள்


ஏப்ரல்25,2012. சூடானும் தென் சூடானும் முழுவீச்சாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, இவ்விரு நாடுகளும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விரு நாடுகளின் எல்லைப் புறத்திலுள்ள Heglig எண்ணெய்வளப் பகுதி குறித்து இடம் பெற்று வரும் தகராறு, தற்போது போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதை முன்னிட்டு கத்தோலிக்கத் திருஅவையும், ஆப்ரிக்க ஒன்றியமும், ஐ.நா.வும் ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துமாறு இவ்விரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றன.
சுமார் 20 ஆண்டுகளாக சூடான் அரசுக்கும், தென் சூடான் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற போர், 2005ம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. தென் சூடான் புதிய நாடாகவும் கடந்த ஆண்டு ஜூலையில் உருவானது. இருந்த போதிலும், Abyei, தெற்கு Kordofan, Blue Nile, எண்ணெய்வளப் பகுதி போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படாமலே இருந்தது.
சூடானில் இடம் பெற்ற சுமார் 20 வருட உள்நாட்டுப் போரில் சுமார் 15 இலட்சம் பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.