2012-04-24 15:08:15

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 118


RealAudioMP3 “நான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பயப்படமாட்டேன். தைரியமாக இருப்பேன். ஏனெனில் கடவுள் என் பக்கம் இருக்கிறார். எனவே நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். எனக்கு உடன்பிறந்தவர்களும் உறவுக்காரர்களுமா உதவிசெய்கிறார்கள்? இல்லையே. மனிதர்களை நம்புவதைவிட நான் கடவுளையே அதிகமாக நம்புகிறேன்” என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே மனநிலைதான் நாம் இன்று சிந்திக்கும் திருப்பாடலிலும் வெளிப்படுகிறது. நாம் இன்று சிந்திப்பது திருப்பாடல் 118.

அன்பார்ந்தவர்களே! “எப்பக்கமும் எதிர்கள் சூழ்ந்து நிற்க, இனி உயிர் பிழைக்கவே முடியாது என்ற நெருக்கடியான நேரத்தில் ஆண்டவரைக் கூவியழைத்தேன். அவர் என்னை மீட்டார். எனவே ஆண்டவருக்கு நன்றி” என்பதே இத்திருப்பாடலில் ஆசிரியர் சொல்லும் கருத்து. இது கிறிஸ்தவ சபைகள் தோன்றுவதற்கு காரணமாயிருந்த மார்ட்டின் லூத்தருக்கு மிகவும் பிடித்தத் திருப்பாடல். “என் வாழ்வில் பல்வேறு நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் இத்திருப்பாடல் ஆசிரியரைப் போன்று நானும் நெருக்கடியில் தள்ளப்பட்டேன்; ஆனால் இறைவன் என்னைக் காப்பாற்றினார். விவிலியம் முழுவதும் எனக்குப் பிடிக்கும். விவிலியச் செய்திகள் முழுமையுமே வாழ்வாக்கப்பட வேண்டும் என்றாலும், திருப்பாடல் 118 எனக்கு மிகவும் பிடிக்கும். இது என்னுடைய திருப்பாடல்” என்று குறிப்பிடுகின்றார் மார்ட்டின் லூத்தர்.

இத்திருப்பாடல் தனிநபர் அனுபவம் போலத்தோன்றினாலும், இதை எழுதியவர் இஸ்ரயேல் மக்களின் ஒட்டுமொத்த மனநிலையைப் பிரதிபலிப்பதாகப் பார்க்க வேண்டும் என விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதோ இத்திருப்பாடலின் சில சொற்றொடர்கள்:
நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

இத்திருப்பாடலின் ஆசிரியர் துன்ப வேளையிலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். துன்பங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு நல்லநிலையில் இருக்கும் போதும் அதே நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நம் வாழ்வின் இடர்களிலும், நிறைவிலும் இறைவன் மேல் நமது நம்பிக்கை என்பதே இன்றைய சிந்தனையின் மையக்கருத்து.

அன்பார்ந்தவர்களே! கத்தோலிக்கத் திருச்சபை இவ்வருடம் முழுவதையும் மறைக்கல்வி ஆண்டாக சிறப்பித்து வருகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு 2013 அக்டோபர் மாதம் வரை விசுவாச ஆண்டாகச் சிறப்பிக்கப்படும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கிறார்.
கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் கண்டெடுப்பதும், புதுப்பிக்கப்பட்ட மனமாற்றத்தோடு உயிர்த்த இயேசுவில் மகிழவும் வேண்டுமென்பதே இவ்விசுவாச ஆண்டின் நோக்கம் எனத் திருத்தந்தைக் குறிப்பிட்டிருக்கிறார். விசுவாசத்தை மீண்டும் கண்டெடுப்பது என்றால், விசுவாசத்தை இழந்து விட்டோமா? என்ற கேள்வி எழுவது இயல்பே. இன்றைய கத்தோலிக்க விசுவாசம் எப்படி இருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன்.

உரோம் நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து வருகிறேன். இங்குள்ள பங்குகளில் பாஸ்கா கால வீடு மந்திரிப்புக்குச் சென்றிருக்கிறேன். அப்போது “வீடு மந்திரிப்பில் எங்களுக்கு நம்பிக்கையில்லை, எங்களுக்கு வேண்டாம், நான் வேலையாக இருக்கிறேன், நாங்கள் இப்போது வெளியில் செல்கிறோம் முடிந்தால் நாளை காலையில் வாருங்கள், இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்ற பதில்களை பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் கேட்டிருக்கிறேன். இது மட்டுமல்ல, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப்பீடம் அமைந்துள்ள உரோம் நகரில் பெரும்பான்மையான கோவில்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பகல்நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் கோவில்களை நிறைக்கின்றனர். இறந்த உறவினர்களின் இறுதிச்சடங்கில் மட்டும்தான் அதிகமான மக்கள் கூட்டங்களைக் கோவில்களில் பார்க்க முடிகிறது. சிலர் திருவருட்சாதனங்களைப் பெறுவதற்கு மட்டும் கோவில்களை எட்டிப்பார்க்கின்றனர். இது உரோம் நகரில் மட்டுமல்ல. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை வகிக்கும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே சூழல்தான் நிலவுகிறது. கத்தோலிக்க விசுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இரண்டு காரணங்களை மட்டும் கோடிட்டுக்காட்ட விழைகிறேன்.

ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் கத்தோலிக்க விசுவாசத்தின் தொட்டில்களாக விளங்கின. தெருவுக்குத் தெரு மிகப்பெரிய கோவில்கள். சில தெருக்களில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் நாள்தோறும் ஆலயங்கள் நிரம்பிக் காணப்பட்டன. இன்று அதே ஆலயங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. காரணம் என்ன? தன்னிறைவு பெற்ற மனித வாழ்வு அல்லது நிறைவு என்று சொல்லலாம். பெரும்பான்மையான மேற்கத்திய நாடுகள் தன்னிறைவு பெற்ற வளர்ச்சியடைந்த நாடுகள். வாரத்தின் ஐந்து நாட்கள் வேலை, வார இறுதிநாட்களில் வெளியூர்ப் பயணம், வருடத்திற்கு ஓரிரு மாதங்கள் விடுமுறை, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா, 60 வயதிற்கு மேல் ஓய்வுதியம், மருத்துவக் காப்பீடு என மகிழ்ச்சியான வாழ்வு. குறையென்று எதுவும் இல்லை. எனவே எதற்கும், யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. இறைவனையும் சேர்த்துத்தான். இந்நிலையில் இத்தகைய தன்னிறைவுப் பெற்ற வாழ்வு அல்லது நிறைவு, இறைவனையும் வெளித்தள்ளுகிறது. இதனால் இறைவன்மேல் கொண்ட விசுவாசம் மெல்லச் சாகத்துவங்கி விட்டது. இதன் விளைவுதான் ஆலயங்களின் வெறுமை.

அப்படியானல் விசுவாச ஆண்டு என்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே என நினைக்கத் தோன்றுகிறதா? ஆலயங்கள் நிரம்பிவழியும் தமிழகம் போன்ற இடங்களை உள்ளடக்கிய இந்திய நாட்டிற்கு இவ்விசுவாச ஆண்டு பொருந்தாது என்று நினைக்கத் தோன்றுகிறதா? அப்படி நினைத்தால் அது மேலோட்டமான சிந்தனை. பலகோணங்களில் விசுவாச வாழ்வில் வளர இவ்விசுவாச ஆண்டுக் கொண்டாட்டம் துணை செய்யும் என்று எளிதான பதிலைச் சொல்லிவிடமுடியும். அதே சமயம் மேற்கத்திய நாடுகளைப் போன்றதொரு விசுவாச வீழ்ச்சி நம்மையும் வெகுவிரைவில் பாதிக்கும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய, உணர்த்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்கிறேன்.

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக்கொண்டிருந்தாலும் இந்தியா பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து வருவது நாம் அனைவரும் நன்கறிந்ததே. இந்தியாவின் வளர்ச்சி மேற்கத்திய நாடுகளின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது என்பது நமக்கு பெருமையானதுதான். இதை, தன்னிறைவு பெற்ற வாழ்வின் துவக்கம் என்று சொல்லலாம். இவ்வளர்ச்சியும், நிறைவும் மகிழ்ச்சியானதுதான். ஆனால், இந்த வளர்ச்சி இறைவன் தேவையில்லை, நம்மால் எல்லாம் செய்யமுடியும் என்ற நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று விடக்கூடாது. இத்தயை வாழ்வின் நிறைவு நமது விசுவாசத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிடக்கூடாது. இத்தகைய நிறைவிற்கு இறைவனே காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என்பதை 13 மற்றும் 21வது சொற்றொடர்கள் வழியாக திருப்பாடல் ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். தன் மன்றாட்டைக் கேட்ட ஆண்டவருக்கு நன்றி செலுத்தி நமக்கு முன்மாதியாக விளங்குகிறார்.
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

கத்தோலிக்க விசுவாசத்தின் வீழ்ச்சிக்கு மனிதவாழ்வின் தன்னிறைவு என்பதை ஒரு காரணமாகச் சொன்னால், மனித வாழ்வின் விரக்தி மற்றொரு காரணம் என்று சொல்ல வேண்டும்.
அடி மேல் அடி மற்றும் துன்பத்திற்கு மேல் துன்பம் நம்மை வாழ்வின் விளிம்பிற்கு அழைத்துச்செல்கிறது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும், அனுமதிக்கும் இறைவன் இருப்பதும் ஒன்றே, இல்லாததும் ஒன்றே என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர் சிலர். வாழ்வின் தன்னிறைவு இறைவனை மறக்க வைக்கிறதென்றால் வாழ்வின் விரக்தி இறைவனை மறுதலிக்க வைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல தனிநபர்களும், குடும்பங்களும் தற்கொலைசெய்து கொண்டன. இவர்களில் பெரும்பான்மையானோர் இறைநம்பிக்கையை இழந்து, இனி ஒன்றும் செய்ய முடியாது எனத் தங்களையே மாய்த்துக்கொண்டனர். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் நமது விசுவாசத்தை இழக்கக்கூடாது. மாறாக, அதிகமாக இறைவனில் பற்றுறுதி கொள்ள வேண்டும் என திருப்பாடல் ஆசிரியர் சொல்கின்றார். சொற்றொடர்கள் 10 மற்றும் 11
வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

வாழ்வின் விரக்தி மற்றும் நெருக்கடியான நேரத்திலும் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற செய்திக்கு மெருகு சேர்க்க ஒரு சகோதரியின் வாழ்க்கை நிகழ்ச்சியைச் சொல்லி இன்று சிந்தனையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
கணவன், மனைவி, இரண்டு மகன்கள் என்று அளவான, அழகான குடும்பம். கணவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். மனைவி இல்லத்தரசி. இச்சகோதரி தினமும் வீட்டு வேலைககளையெல்லாம் முடித்துவிட்டு விவிலியம் வாசிப்பார். தூய ஆவியார் செபக்கூட்டங்களுக்குச் செல்வார். தன் வாழ்வு நிகழ்வுகளைப் பெரும்பாலும் விவிலிய வாசகங்களோடு ஒப்புமைப்படுத்திப் பார்ப்பார், பேசுவார். அவருடைய பல்வேறு துன்பங்களுக்கிடையிலும் இறைவன் தன்னோடு இருக்கிறார், அவர்தாம் தனக்கு எல்லாமே என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

அது 2006ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது அவர்களது மூத்தமகன் பொறியியல் இறுதி ஆண்டும், இளைய மகன் ஆறாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் மாலை நேரத்தில், இளைய மகனுடைய சிறப்பு பயிற்சி வகுப்பு முடித்து, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார் ஆசிரியர். பாதிவழியில் ஒரு சாலைவிபத்து. இளையமகன் தூக்கி வீசப்பட்டான். எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் ஆசிரியருக்கோ தலையிலும், காலிலும் ஏன் உடல்முழுவதுமே பலத்தகாயம். இச்செய்தியைக் கேட்ட அச்சகோதரிக்கு தலையில் இடி விழுந்தது போலாயிற்று. அக்குடும்பத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து ஆசிரியர் நடக்க ஆரம்பித்தார். சக்திவாய்ந்த மருந்துகள் கொடுக்கப்பட்டதால் ஆசிரியர் தன் ஞாபகசக்தியை இழந்திருந்தார். எனவே விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் அக்குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்க முடியவில்லை. அதுவரை தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு விவிலியம் வாசித்து, இறைவன்தான் எல்லாமே என தன் வாழ்க்கை நிகழ்வுகளை விவிலிய வாசகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்த சகோதரி, அவரது குடும்பத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டுவிட்ட அந்நேரத்தில் இறைநம்பிக்கையில் தளராது இருப்பதுதானே உண்மையான விசுவாசம். ஆம். நான் கண்டேன். அதே விசுவாசம். அதைவிட அதிகமான விசுவாசத்தை அச்சதோரியினிடத்தில் கண்டேன். அவரைச் சந்தித்தபோதெல்லாம் இதைத்தான் சொன்னார்: “ஆண்டவர் இருக்கிறார். அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் எனவே எனக்குக் கவலையில்லை”. அடுத்த சில மாதங்களில் சிறிது சிறிதாக ஆசிரியர் தன் நினைவாற்றலைப் பெற்றார். அடுத்த ஆண்டே மூத்த மகனுக்கு வட இந்தியாவில் வேலைகிடைத்தது. முன்பு இருந்ததைவிட இப்போது செல்வச்செழிப்போடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். தன் நெருக்கடியானச் சூழலிலும் தன் விசுவாசத்தை இழக்காத இச்சகோதரி எனக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நம் வாழ்வின் இடரிலும், நிறைவிலும் இறைவன் மேல் வைத்த நமது நம்பிக்கையை ஒரு போதும் இழக்கக்கூடாது. மாறாக, அதிகமாக இறைவனை நம்ப வேண்டும் என்பதுதான் இத்திருப்பாடல் நமக்குச்சொல்கின்ற வாழ்க்கைப்பாடம்.








All the contents on this site are copyrighted ©.