2012-04-24 15:43:11

முதல் முறையாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு திருத்தந்தையின் விருது


ஏப்ரல்,24,2012. சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு முதல் முறையாக திருத்தந்தையின் விருது ஒன்று வழங்கப்படுவது மகிழ்வு தரும் நிகழ்வு என்று இங்கிலாந்தின் Birmingham பேராயர் Bernard Longley கூறினார்.
திருத்தந்தை புனித பெரிய கிரகோரி அவர்கள் நினைவாக பாப்பிறைத் தளபதி என்ற விருது தலைசிறந்த சேவை செய்துள்ள கத்தோலிக்கர்களுக்கு பொதுவாக வழங்கப்படும். வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், கத்தோலிக்கத் திருஅவைக்கு சிறந்த பணியாற்றியவர்களுக்கு மிக அரிதாக இவ்விருது வழங்கப்படும். சீக்கியர்களின் குருநானக் Nishkam Sewak Jatha என்ற பிறரன்புச் சேவை அமைப்பின் தலைவரான Bhai Sahib Bhai Dr Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு இஞ்ஞாயிறன்று இவ்விருது திருத்தந்தையின் பெயரால் வழங்கப்பட்டது.
சமயங்களுக்கிடையே இணைப்பை உருவாக்கவும், பிறரன்பு சேவைகள் ஆற்றவும் தன் வாழ்வைச் செலவிட்டு வரும் Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு திருத்தந்தையின் இந்த உயரிய விருது வழங்கப்படுவதால், சமய உரையாடல், பிறரன்புச் சேவைகள் ஆகியவற்றிற்குத் திருத்தந்தையும், கத்தோலிக்கத் திருஅவையும் வழங்கும் தனி கவனம் வெளிப்படுகிறது என்று பேராயர் Longley கூறினார்.
சீக்கியர்களின் ஆன்மீகத் தலைவராக பணியாற்றும் Mohinder Singh Ahluwalia, திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால், மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் அசிசி நகரில் நடத்திய அனைத்துலக பல்சமயத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்.








All the contents on this site are copyrighted ©.