2012-04-24 15:43:33

சிறுபான்மை மதத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார் பாகிஸ்தான் பேராயர் கூட்ஸ்


ஏப்ரல்,24,2012. கிறிஸ்தவர்கள் என்ற முறையிலும், மத சிறுபான்மையினர் என்ற வகையிலும் முழு மாண்பு மற்றும் விடுதலையுடன் கூடிய சரிநிகர் உரிமைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் குரல் கொடுப்பதாக அறிவித்தார் பாகிஸ்தான் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவருக்கு சரிநிகர் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கத்தோலிக்க ஃபீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கராச்சி பேராயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் கூட்ஸ், கிறிஸ்தவர்களும் சரிநிகர் உரிமையுடைய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் விசுவாசத்தைக் கடைபிடிக்க உதவும் உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய மிகப்பெரும் சவாலாக உள்ளதாக அறிவித்தார்.
கல்வித்தொடர்புடையவைகளில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்வதால் கிறிஸ்தவர்களின் கல்வியில் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய ஓர் அவசரத்தேவை உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.
பாகிஸ்தானில் மதசகிப்பற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், கிறிஸ்தவர்கள் மீதான பகைமை உணர்வுடன் கூடிய தாக்குதல்கள் தொடர்வதாகவும் கூறினார் பேராயர் கூட்ஸ். பாகிஸ்தானின் குடிமக்களாக இருந்து இஸ்லாமியர்களின் மதிப்பீடுகளை பகிர்கிறபோதிலும், கிறிஸ்தவர்கள் அந்நியர்களாகவே நோக்கப்ப்படுவது வருத்தம் தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.








All the contents on this site are copyrighted ©.