2012-04-23 15:45:48

வாரம் ஓர் அலசல் – நேசிப்போம் வாசிப்பை


ஏப்.23,2012. ஏப்ரல் 23ம் நாள், உலகப் புகழ் பெற்ற சில எழுத்தாளர்களோடு அதிக உறவைக் கொண்டிருக்கும் நாள். ஆங்கிலேய நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் ஏப்ரல் 23 என்று சொல்லப்படுகின்றது. நொபெல் பரிசு பெற்ற ஐஸ்லாந்து எழுத்தாளர் Halldór Kiljan Laxness (1902), ப்ரெஞ்ச் நாவல் எழுத்தாளர் Maurice Druon (1918) பலமொழித் திறமை கொண்ட இரஷ்ய எழுத்தாளர் Vladimir ovich Nabokov (1899), கொலம்பிய எழுத்தாளர் Manuel Mejía Vallejo (1923) போன்றோர் இந்நாளில் பிறந்திருக்கின்றனர். பெரு நாட்டு எழுத்தாளர் இன்கா கார்சிலாசோ (1616– El Inca Garcilaso de la Vega) இந்நாளில் இறந்திருக்கிறார். எனவே ஏப்ரல் 23 உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைந்துள்ளது. இதே நாளில் இஸ்பெயினின் கட்டலோனியாவில் (Catalonia), குறிப்பாக பார்சலோனாவில் (Barcelona) புனித ஜார்ஜ் விழாவும் ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்படுகிறது. புனித ஜார்ஜைத் தனது பாதுகாவலராகக் கொண்டிருந்த, Aragon மன்னர் முதலாம் பீட்டர், இப்புனிதரின் பரிந்துரையால் Alcoraz சண்டையில் வெற்றி பெற்றார். எனவே புனித ஜார்ஜ் இஸ்பெயினின் பல நகரங்களுக்குப் பாதுகாவலர். இந்த விழா நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் ஒருவர் ஒருவருக்குப் பரிசாகக் கொடுத்து வருகின்றனர். ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்குவது மத்திய காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால் புத்தகங்களை வழங்கும் பழக்கம் 1923ம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. புகழ் பெற்ற இஸ்பானியப் புதினங்களையும் கவிதைகளையும், நாடகங்களையும் எழுதிய Miguel de Cervantes என்பவர், 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இறந்தார். இஸ்பானிய மொழியே Cervantes மொழி என்று அழைக்கப்படும் அளவுக்கு இவரது எழுத்துக்கள் புகழ் பெற்றிருந்தன. இதே 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி புகழ் பெற்ற ஆங்கிலேய நாடக ஆசிரியரும், எழுத்தாளரும், நடிகருமான வில்லியம் ஷேக்ஸ்பியரும் இறந்தார். இந்த இருவரும் இறந்த நினைவு நாளை பார்சலோனாவில் ஒரு புத்தகக் கடைக்காரர் சிறப்பிக்கத் தொடங்கியதையொட்டி இந்நாளில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கம் தொடங்கியது. புத்தக வெளியீட்டுத் தலைநகராகக் கருதப்படும் பார்சலோனாவில் ஏப்ரல் 23ம் தேதியன்று சுமார் 40 இலட்சம் ரோஜா மலர்களும், சுமார் எட்டு இலட்சம் புத்தகங்களும் விற்பனையாகின்றன என்று இணையதளச் செய்திகள் கூறுகின்றன.
ஏப்ரல் 23ம் நாளை ஏன் இவ்வளவு தூரம் விவரித்துக் கொண்டு வருகிறோம் என்று, நேயர்களே, நீங்கள் நினைக்கலாம். ஆம். இஸ்பெயின் நாட்டு Catalonia பகுதியில் இடம் பெற்று வரும் இந்தப் புத்தக அன்பளிப்பு நாள், அனைத்துலகப் புத்தக தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று பன்னாட்டு பதிப்பாளர் அமைப்பு பரிந்துரைத்தது. இஸ்பெயின் அரசு இதனை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோவிற்கு (UNESCO) விண்ணப்பித்தது. இரஷ்யப் படைப்பாளிகளும், புத்தக காப்புரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே பிரான்ஸ் நாட்டுப் பாரிஸ் நகரில் 1995 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் புத்தக தினம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்படது. இத்தீர்மானத்தின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 23ம் தேதியன்று அனைத்துலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மக்களின் அறநெறி வாழ்வை நெறிப்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23, அனைத்துலக புத்தக தினமாக கொண்டாடப்படும்" என்று யுனெஸ்கோ தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச நூலகக் கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பு (IFLA), சர்வதேச புத்தக விற்பனையாளர் கூட்டமைப்பு(IBF), சர்வதேச வெளியீட்டாளர் கழகங்கள்(IPA-UIE), யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் ஆகிய அனைத்தும் இந்நாளைச் சிறப்பிக்கின்றன.
இந்த ஏப்ரல் 23ம் தேதியை உலக புத்தக நாள் என்றும் சொல்கிறார்கள். புத்தகங்களை வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை வழியாக அறிவு சார்ந்த சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் இவ்வுலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, புத்தகங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சியைக் கண்டடையவும், எழுத்தாளர்கள் மனித சமுதாயத்தின் கலாச்சார வளர்ச்சிக்கு ஆற்றும் பணியை மதிக்கவும் இளையோருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்நாளில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மேலும், 1932ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Index Translationum எனப்படும் பன்னாட்டு மொழி பெயர்ப்பு அட்டவணை அமைப்பின் (International bibliography of translations) 80ம் ஆண்டு நிறைவு, இந்த 2012ம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் மொழி பெயர்க்கப்படும் நூல்களின் பட்டியலை இவ்வமைப்பு கொண்டுள்ளது. 1979ம் ஆண்டிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட இருபது இலட்சத்து மேற்பட்ட புத்தகங்களின் பட்டியலை இவ்வமைப்புக் கொண்டுள்ளது. எனவே, 'புத்தகங்களும் மொழிபெயர்ப்பும்’ என்ற தலைப்பில் இத்திங்களன்று இவ்வுலக தினம் சிறப்பிக்கப்பட்டது.
இவ்வுலக தினத்திற்குச் செய்தி வெளியிட்ட யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova, “தனிமனிதர்களுக்கிடையிலும், சமூகங்களுக்குள்ளும், தலைமுறைகள் மற்றும் பிற சமூகங்களுக்கு இடையிலும் உரையாடலை வளர்ப்பதற்கு, அதிக திறன்மிக்க கருவிகள் புத்தகங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். “இவ்வகையான உரையாடல் பாதுகாக்கப்பட வேண்டும். புத்தகங்களின் தொழிட்நுட்பம் பழமையானது. ஆயினும், இவை கொண்டுள்ள சில கூறுகளை வேறு எதனாலும் சரிக்கட்ட முடியாது. இவ்வுலகின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் சக்தியாக புத்தகம் அமைந்துள்ளது. சகிப்புத்தன்மையின் சிறந்த குரல்களாக, நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாக, சுதந்திர மற்றும் அடக்குமுறையற்ற சமுதாயங்களின் சுவர்களாக இருப்பவை புத்தகங்கள். எனவே புத்தகங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இன்றும் உலகில் எழுத வாசிக்கத் தெரியாமல் 80 கோடி வரையிலான வயது வந்தோர் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தப் புத்தகங்களால் கிடைக்கும் அறிவுச்சொத்துக்கள் சென்றடைய வேண்டும்”. இவ்வாறெல்லாம் தனது செய்தியில் கூறியுள்ளார் யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova.
இத்தினத்தை முன்னிட்டு இஞ்ஞாயிறன்று சென்னை மெரினா கடற்கரையில் “தமிழகமே வாசிப்போம்!” என்ற தலைப்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. அனைவரும் வாசிக்க வேண்டும், பிறர் வாசிக்க உதவ வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. 'மனிதரின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே’ என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன். இந்த அறிவியல் மேதை ஐன்ஸ்ட்டீன், ஒருமுறை இரயிலில் பயணம் செய்த போது ஓர் இரயில் நிலையத்தில் சாப்பிடுவதற்காக உணவு விடுதிக்குச் சென்றார். அந்த விடுதியில் பணியாள் அன்றைய உணவுகளின் பட்டியலை அவரிடம் நீட்டினார். ஐன்ஸ்ட்டீன் வாசிப்பதற்கான தனது கண்ணாடியை இரயில் பெட்டியிலே வைத்து விட்டு வந்திருந்ததால், அவர் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆளிடம் அந்த உணவுப் பட்டியலை நீட்டி வாசிக்கச் சொன்னார். அதை வாங்கிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்த அந்த ஆள், ஐன்ஸ்ட்டீனிடம், உங்களைப் போலவே எனக்கும் எழுத வாசிக்கத் தெரியாது என்று அப்பாவித்தனமாகச் சொன்னாராம்.
இன்றைய உலகில் ஏவுகணை தொழில்நுட்பக் கலாச்சாரம் வளர்ந்திருக்கும் அளவுக்கு, நாடுகளில் மக்கள் அனைவரும் கல்வியறிவு பெறவில்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது. கல்வியறிவு இருந்தால்தானே புத்தகங்களை வாசிக்க முடியும். குழந்தைகள் பேசத் தொடங்குவற்கு முன்பே, நாம் அவர்களுக்குப் புத்தகத்தை வாசித்துக் காட்ட வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள். அதனால், குழந்தைகளின் மூளை வளர்ச்சியும், அறிவுத் திறனும், முடிவு எடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தொலைக்காட்சிக்கும் இணையதளப் படக்காட்சிகளுக்கும் செலவிடும் நேரத்தோடு ஒப்பிடுகையில் புத்தக வாசிப்புக்கெனச் செலவிடும் நேரம் குறைவே.
1950களில் எடுக்கப்பட்ட முதல் புள்ளி விபரக் கணக்கின்படி உலகில் குறைந்தது 44 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவர்களாய் இருந்தனர். இந்நிலை 1998ம் ஆண்டில் 16 விழுக்காடாகக் குறைந்திருந்தது. எனினும், 21ம் நூற்றாண்டில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கும், காரணம் 20ம் நூற்றாண்டின் இறுதியில் உலகச் சிறாரில் 25 விழுக்காட்டினர் மட்டுமே பள்ளிக்குச் சென்றனர் என்று யுனெஸ்கோ அறிவித்தது. இந்நிறுவன இயக்குனர் குறிப்பிட்டது போல இன்றும் 80 கோடி வயது வந்தோர் வாசிக்கத் தெரியாதவர்கள். எனவே இந்த அனைத்துலகப் புத்தக நாளில் ஓர் உறுதி மொழியாவது நாம் எடுக்கலாமே. ஓய்வு நேரத்தில் படிப்பறிவற்ற ஒருவருக்கு எழுத வாசிக்கச் சொல்லிக் கொடுக்கலாம். மற்ற செலவுகளோடு புத்தகம் வாங்கவும் சிறிது பணம் செலவழித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக அளிக்கலாம். ஒன்றாகக் கூடி வாசித்த புத்தகங்கள் குறித்தக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புத்தகம்தான் சமூக மாற்றத்துக்கான திறவுகோல். புத்தகங்களே ஒரு மனிதனை உருவாக்குகின்றன (பேகன்). எனவே புத்தகம் வாசிப்பதை ஓர் இயக்கமாகச் நாம் செய்யலாம்! நாம் வாசிக்கும் புத்தகத்தை வைத்து நாம் யார் என்று கணித்து விடலாம் என்ற கூற்றையும் மறக்காமல் இருப்போம். புத்தக வாசிப்பு போன்று வாழ்வைச் செம்மைப்படுத்தும், பதப்படுத்தும், பக்குவப்படுத்தும் நண்பன் வேறு யாரும் இருக்க முடியாது.
இன்று உலகில் 12,98,64,880 புத்தகங்கள் இருப்பதாக ஓர் ஊடகம் கூறியது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்ட ஒருவர் தனது வாழ்நாளில் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வாசித்திருப்பார் என்று ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. William Gladstone என்பவர் 22 ஆயிரம் புத்தகங்களை வாசித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், கோடை விடுமுறையைச் செலவிடுவதன் ஒரு பகுதியாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கைகொள்வோம் என்று கடந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது(ஆக.03,2011) பரிந்துரை செய்தார். விடுமுறை காலத்தில் வாசிப்பதற்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கி விவிலியத்தின் சில புத்தகங்களை நாம் வாசித்தால் என்ன? என்றும் பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
RealAudioMP3 வாசிப்பது, அதுவும் நல்ல புத்தகங்களை வாசிப்பது வாழ்க்கையை வழுக்கி விடாமல் பார்த்துக் கொள்ளும். எப்போதும் நல்ல புத்தகங்களுக்கிடையே எனது காலத்தைக் கழிக்க விரும்புகிறேன்! என்று சொன்ன நேருஜி போல நாமும் புத்தகங்களுக்கிடையே வாழப் பழகுவோம். வாழ்க்கை வெற்றியின் இரகசியம் புத்தகங்களே!(மூர்)







All the contents on this site are copyrighted ©.