2012-04-23 15:52:06

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


ஏப்ரல் 23, 2012. உயிர்த்த இயேசு எவ்வாறு தன் சீடர்களுக்குத் தோன்றினாரோ அவ்வாறே இன்றும் நம்மிடையே தன் வார்த்தை மற்றும் திருநற்கருணை மூலம் பிரசன்னமாயிருக்கிறார் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்று சீடர்களுக்குச் சமாதானத்தை வழங்கிய இயேசு, நமக்கும் தன் அமைதியை வழங்கி, நம் வாழ்வை மகிழ்வுக்குத் திறந்து, தீமை, துன்பம், வேதனை மற்றும் அச்சத்தினால் சூழப்பட்டிருக்கும் இவ்வுலகின் இறுதி எல்லை வரைக்கும் அவரின் சாட்சிகளாக வாழ அழைப்பு விடுக்கிறார் என, உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய போது கூறினார் திருத்தந்தை.
உயிர்த்த இயேசு கடற்கரையில் கூடியிருந்த சீடர்களுக்கும், எம்மாவுஸ் வழியில் சீடர்களுக்கும் தோன்றி அவர்களோடு உரையாடிய நிகழ்வுகள் குறித்துச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசு தன் சீடர்களோடு உரையாடியதன் வழி மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களின் மனக்கண்களைத் திறந்தார் என வாசிக்கிறோம் என்றார்.
வழக்கமாக உயிர்ப்புத் திருவிழாக்காலத்தில் சிறுவர் சிறுமிகள் திருநற்கருணை அருளடையாளத்தை முதன் முறையாகப் பெறுவது இடம்பெறும் என்பதையும் சுட்டிக்காட்டியப் பாப்பிறை, நல்விசுவாசத்தின் இத்திருவிழாவுக்கு சிறார்களைத் தயாரிப்பதில் பங்கு குருக்கள், பெற்றோர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களின் கடமையையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.