2012-04-23 15:52:18

ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி


ஏப்ரல்,23,2012. உலகின் பல்வேறு மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை அழகையும் சந்திக்க நாம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணங்கள் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் செல்லும் அரியதொரு வாய்ப்பு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மெக்சிகோ நாட்டின் Cancún நகரில் இத்திங்கள் முதல் ஏப்ரல் 27, வருகிற வெள்ளி வரை நடைபெறும் ஏழாவது சுற்றுலா மெய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு, நாடு விட்டு நாடு செல்வோர் மற்றும் பயணிகளுக்கு மெய்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliòவுக்கும் Cancún ஆயர் Pedro Pablo Elizondo Cárdenasக்கும் அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
"படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்." (13:5) என்று சாலமோனின் ஞானம் என்ற நூலில் காணப்படும் விவிலிய வார்த்தைகளை மேற்கோளாக எடுத்துக் கூறியத் திருத்தந்தை, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் அனுபவமாக மாறவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் சுற்றுலா என்ற வர்த்தகத்தால் விளைந்துள்ள தீமைகளையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். சுற்றுலா என்ற போர்வைக்குக் கீழ் மனித வர்த்தகங்கள் அதிகரித்து வருவதையும், முக்கியமாக, சிறுவர் சிறுமியர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதையும் திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பணியில் திருஅவை ஈடுபட்டிருப்பதன் நோக்கமே, இதன் வழியாக, உலக நாடுகளைக் காணும் பயணங்களை பொறுப்புள்ள வகையில் நடத்தும் வழிமுறைகளை கடைபிடிப்பதே என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
விடுமுறையின் வழியாக மக்கள் தங்கள் உடல்களை அமைதிப்படுத்தும் வேளையில், அவர்கள் மனங்களுக்குப் புத்துயிர் வழங்கும் வழிகளை திருஅவையின் மெய்ப்புப் பணி கண்டுபிடித்து மக்களை வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.