2012-04-21 14:33:19

கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


ஏப்.21,2012: உலகளாவியத் திருஅவையின் தேவைகளுக்காகவும், குறிப்பாக கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து செபிக்குமாறு ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தைக்கும் அவரது பிறரன்பு பணிகளுக்குமென நிதியுதவி செய்யும், Papal Foundation என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பின் சுமார் 120 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு செபிக்கக் கேட்டுக் கொண்டார்.
இக்காலத்தில் உடனடியாகத் தேவைப்படும் அறநெறி விவகாரங்களை நற்செய்தியின் ஒளியில் அறிவிப்பதற்குக் கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்படும் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார் அவர்.
வட அமெரிக்க அருளாளர்கள் Kateri Tekakwitha, அன்னை Marianne Cope ஆகிய இருவரையும் வரும் மாதங்களில் புனிதர்களாகத் தான் அறிவிக்கவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அமெரிக்கத் திருஅவையைக் கட்டி எழுப்புவதில் பெண்கள் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க பங்கை இப்புனிதர்கள் நினைவுபடுத்துகின்றார்கள் என்றும் கூறினார்.
1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Papal Foundation என்ற அமைப்பு, 1990 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏழு கோடிக்கு மேற்பட்ட டாலரை உலகின் சில ஏழை நாடுகளில் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கியுள்ளது.
வளரும் நாடுகளிலிருந்து குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் உரோமையில் இறையியல் படிப்பதற்கும், என்ற வத்திக்கான் செய்தி இணையதளம் உட்பட திருஅவையின் ஊடகத்துறை மற்றும் நற்செய்தி அறிவிப்புக்கும் இவ்வமைப்பு நிதி உதவி செய்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.