2012-04-20 15:33:28

அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – திருப்பீடத் தூதர்


ஏப்.20,2012. தங்களது தாயகத்தில் எதிர்நோக்கும் சமய அடக்குமுறையைத் தடுப்பதற்கும், உலகெங்கும் உண்மையான சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் உழைக்க வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய கத்தோலிக்க செப நிகழ்வில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Francis A. Chullikatt இவ்வாறு கூறினார்.
மனித சமுதாயத்தின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்றுரைத்த பேராயர் Chullikatt, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக வாழும் போது மரண அச்சுறுத்தலை எதிர்நோக்குவதன் அர்த்தத்தை ஈராக்கில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய போது உணர முடிந்தது என்று கூறினார்.
வகுப்புவாத வன்முறையின் கொடுமைகளைத் தான் நேரில் பார்த்ததாகவும், தனக்குத் தெரிந்த மக்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதையும் தான் அறிந்ததாகவும் பேராயர் விளக்கினார்.
கடவுள் மீதான பற்றுறுதியும் சமய சுதந்திரமும் ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்றும் ஐ.நா.வுக்கானத் திருப்பீட தூதர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.