2012-04-19 15:13:03

கவிதைக் கனவுகள் .... சுமை தாங்கும் முதுகு


பள்ளிக்குச் செல்லும் பாப்பாவின் முதுகில்
புத்தகப் பையின் சுமை
இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டு
உற்சாகமாக நடந்து செல்லும்
பாப்பாவுக்குப் புத்தகப் பை சுமையல்ல

விடுமுறைக்குச் செல்லும் இளவல்கள் முதுகில்
கனமானப் பயணப் பைகள்
பேருந்தில் முதுகை விட்டு இறங்காத
பெரிய பைகள் பயணிகளுக்கு இடைஞ்சல்
இளவல்களுக்கோ இன்பச்சுற்றுலாச் சுமைகள்

சரக்கு ஏற்றும் தினக்கூலியின் முதுகில்
டன் டன்னாய் சாக்கு மூட்டைகள்
முதுகு வளைந்தாலும் நிற்காத கால்கள்
முகத்தின் முன்னே பிள்ளைகள் எதிர்காலம்
தினக்கூலிக்கு சரக்கு மூட்டைகள் சுமையல்ல

பருத்தி எடுக்கும் தாயின் முதுகில்
பிள்ளைக்குச் சேலைத் தொட்டில்
தாலாட்டுப் பாட்டில் தூங்கும் பிள்ளை
வியர்வைக் குளியலில் வேலையைத் தொடரும்
தாய்க்கு முதுகில் தொட்டில் சுமையல்ல

சுமை தாங்கும் முதுகுக்கு
சுமைகளும் சுகமே.

முதுகு தாங்கும் சுமைகள் சுகமானவை. எப்போது.....?







All the contents on this site are copyrighted ©.