2012-04-18 15:15:43

மதங்களுக்கிடையில் உரையாடல் என்ற கருத்து செயல்வடிவிலும் உறுதி செய்யப்பட வேண்டும் - பாகிஸ்தான் அரசு அதிகாரி


ஏப்ரல்,18,2012. மதங்களுக்கிடையில் உரையாடல் என்ற கருத்து வெறும் எண்ணங்களாக இருப்பதில் பயனில்லை, அவை செயல்வடிவிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதனன்று பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள ஒரு பல்சமய கருத்தரங்கைக் குறித்து, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் விவகாரங்களில் அரசுத் தலைவரின் ஆலோசகராகப் பணியாற்றும் Paul Bhatti பேசியபோது இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டம் மக்கள் மனங்களில் பெரும் தாக்கங்களை உருவாக்கி வருகிறது என்று கூறிய Paul Bhatti, இது போன்றதொரு சட்டத்தை அரசு நீக்கினால் மட்டுமே மக்களுக்கு பிற மதங்களின் மீது நல்லெண்ணங்கள் உருவாகும் என்று வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இருந்தும், உலகின் ஒரு சில நாடுகளில் இருந்தும் 500க்கும் அதிகமான அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த கருத்தரங்கை Lahore Badshahi என்ற மசூதியின் தலைவர் ஏற்பாடு செய்துள்ளார்.
ஒரு சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூறும் தவறான கருத்துக்களால் இளைய தலைமுறையினர் பிற மதங்கள் மீது வெறுப்பை வளர்த்து வருகின்றனர் என்றும், பாகிஸ்தானில் அனைத்து இளையோரும் பல மதங்களின் கல்வியைப் பெறுவது அவசியம் என்றும் அரசுத் தலைவரின் ஆலோசகர் Paul Bhatti எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.