2012-04-18 15:21:46

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 18, 2012. கடந்த சில வாரங்களாக, கிறிஸ்தவ செபம் குறித்தத் தொடரை புதன் மறைபோதகங்களில் வழங்கி வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரம் புதனன்று, தூய ஆவியின் வருகைக்காக பெந்தகோஸ்தே நாளின்போது அன்னைமரியும் சீடர்களும் செபத்துடன் காத்திருந்தபோது நிகழ்ந்த ' சிறு பெந்தகோஸ்தே' குறித்து நம் பார்வையைத் திருப்புவோம் என தன் பொதுமறைபோதகத்தைத் துவக்கினார்.
புனிதர்கள் பேதுருவும் யோவானும் கைதுசெய்யப்பட்டு விடுதலை பெற்றபின்னர், கிறிஸ்தவ சமூகம் அவர்களுடன் செபத்தில் இணைந்து மன்றாடியவுடன், அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக்கூறினர் என திருத்தூதர் பணி நூல் நான்காம் பிரிவின் வழியாக அறிய வருகின்றோம். இந்தச் செபம் நமக்கு ஆதிக்கிறிஸ்தவ சமூகத்தின் ஒன்றிப்பைக் காட்டுகிறது. சித்திரவதைகளின் முன்னால் இறைவார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க வேண்டும் என்பதை மட்டும் அது கேட்கிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தின் ஒளியில் இன்றைய நிகழ்வுகளை ஆய்வுச் செய்து பகுத்துணரவும், இறைவனால் முன்னுரைக்கப்பட்டுள்ளவைகளின் நிறைவை இயேசுவின் மறையுண்மையில் கண்டுகொள்ளவும் இச்செபம் முயல்கிறது. நற்செய்தியை எடுத்துரைக்கும் பணியில் நமக்குச் சக்தியைத் தந்து நம்முடன் துணை வருமாறு இறைவனை இறைஞ்சுகிறது. ஆதித்திருஅவையின் இந்தச் செபம், நம் செபத்தையும் தூண்டுவதாக. நமக்கு ஏமாற்றத்தை வழங்காதிருக்கும் நம்பிக்கையை நம்மேல் பொழியும் தூய ஆவியின் கொடையைப் பெறவும், கிறிஸ்துவின் ஒளியில் இறைவனின் அன்புத்திட்டத்தைக் கண்டுகொள்ளவும் நாம் முயல்வோமாக.
என தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.