2012-04-18 15:14:46

டைட்டானிக் கப்பலுடன் மூழ்கி இறந்தவர்களில் மூவர் கத்தோலிக்க அருள்பணியாளர்கள்


ஏப்ரல்,18,2012. 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அதிகாலையில் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுடன் மூழ்கி இறந்தவர்களில் மூவர் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் என்ற தகவலை இயேசு சபையினரால் நடத்தப்படும் “America” இதழ் வெளியிட்டுள்ளது.
'டைட்டானிக்' கப்பல் மூழ்கிய நிகழ்வின் நூறாம் ஆண்டு நினைவு, ஏப்ரல் 14, 15 கடந்த சனிக்கிழமை, ஞாயிறு ஆகிய இருநாட்கள் ஊடகங்களால் பேசப்பட்டு வந்தது.
1500க்கும் அதிகமான மக்கள் இறக்கக் காரணமான இந்த விபத்தில், அருள்பணியாளர்கள் Juozas Montvila, Josef Peruschitz, Father மற்றும் Thomas Byles ஆகிய மூவரும் இறுதிவரை மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனம் வழங்கியும், அவர்களைச் செபங்களில் வழிநடத்தியும் வந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்த உயிர் காக்கும் படகுகளில் தப்பிப்பதற்கு இம்மூன்று அருள்பணியாளர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தபோதிலும், இம்மூவரும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டு, மரண பயத்தில் சூழப்பட்டிருந்த மக்களுடன் தங்கினர் என்று கூறப்படுகிறது.
இம்மூவரில், ஆங்கலிக்கன் சபையில் இருந்து கத்தோலிக்கத் திருமறைக்கு மாறி, அருள்பணியாளராக திருநிலைப் படுத்தப்பட்ட அருள்தந்தை Thomas Bylesன் மரணம் குறித்து பேசிய திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர், இவரது மரணம் ஒரு மறைசாட்சியின் மரணம் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.