2012-04-18 15:18:31

எயிட்ஸ் நோய்க்கு குருத்து உயிரணுக்கள் மருந்தாகும் வாய்ப்பு – நம்பிக்கை தரும் ஆய்வு


ஏப்ரல்,18,2012. ‘ஸ்டெம்செல்கள்’ எனப்படும் குருத்து உயிரணுக்களை மாற்றியமைத்து, அவற்றை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் செலுத்தி, அதன்மூலம் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்த வாய்ப்பிருப்பதாக கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆய்வுக்கூடத்தில் எலிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கக்கூடிய பலன்களைத் தந்திருப்பதாகவும், எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் போராட்டத்தில் இது முக்கிய முன்னேற்றம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மனிதர்களைத் தாக்கும் எச்.ஐ.வி. கிருமியானது, மனித உடலில் புகுந்ததும் குறிப்பிட்ட திசுக்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்பு அங்கிருந்தபடி பலுகிப்பெருகி இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்களைத் தாக்கி அழிப்பதன் மூலம் எயிட்ஸ் நோயை உருவாக்குகின்றன.
இந்த எச்.ஐ.வி. கிருமிகள் தங்கியிருக்கும் திசுக்களை குறிவைத்துச் செல்லக்கூடிய வகையில் குருத்து உயிரணுக்களை ஆய்வாளர்கள் முதலில் மாற்றியமைத்தனர். இப்படி மாற்றியமைக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை எயிட்ஸ் தாக்கிய எலிகளின் உடலில் செலுத்திய சில நாட்களில் அந்த எலிகளின் இரத்தத்தில் இருந்த எச்.ஐ.வி. தொற்றின் அளவு குறைந்திருப்பதையும், நோய் எதிர்ப்புச்செல்கள் அதிகரித்திருப்பதையும் இவர்கள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் குருத்து உயிரணுக்களைப் பயன்படுத்தி எயிட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் தொடர்போராட்டத்தில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் சென்னையிலுள்ள எயிட்ஸ் ஆய்வு மையத்தைச்சேர்ந்த மருத்துவர் சுந்தரராமன்.







All the contents on this site are copyrighted ©.