2012-04-18 15:17:33

உலகின் மிகப் பெரும் அணை சரியும் ஆபத்து : இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


ஏப்ரல்,18,2012. சீனாவில், உலகின் மிகப் பெரும் அணை என்று சொல்லப்படும் Three Gorges அணையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதால், அருகில் உள்ள ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாக சீன அரசின் ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.
Three Gorges அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள மண் சரிவினால் அணைக்கட்டு உடையலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
4000 கோடி டாலர்கள் செலவு செய்து, Yangtze ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இவ்வணை, உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளதென சொல்லப்படுகிறது. இம்மாபெரும் அணைக்கு அருகில் இருந்து ஏற்கனவே பத்து இலட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2010ம் ஆண்டில் இந்த அணைக்கட்டில் தேங்கக்கூடிய நீர், அதன் உச்ச அளவை எட்டியது முதல், தொடர்ச்சியாக பல மண்சரிவுகளை இந்த அணைக்கட்டு எதிர்கொண்டு வருகிறது.
மண்சரிவு ஆபத்துக்களைத் தொடர்ந்து, கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களுக்குப் போதுமான மாற்று வசதிகளைச் செய்ய முடியவில்லை என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.