2012-04-17 15:36:26

சிரியாவில் துன்புறும் மக்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய நிதி உதவி அம்மக்கள் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது - வத்திக்கான் அதிகாரி


ஏப்ரல்,17,2012. சிரியாவில் துன்புறும் மக்களுக்குத் திருத்தந்தை அனுப்பிய நிதி உதவி அம்மக்கள் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிரியாவில் துன்புறும் கத்தோலிக்கர்களின் இடர் களையும் பணிகளுக்கென Cor Unum என்ற பிறரன்பு அவையின் வழியாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஒரு இலட்சம் டாலர்கள் நிதி உதவி அனுப்பியிருந்தார்.
இத்தொகையை அப்பகுதிகளில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்புக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கிய Cor Unum அவையின் செயலர் அருள்தந்தை Giampetro dal Toso, CNA என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திருத்தந்தை சிரியா மக்கள் மீது காட்டிவரும் தனிப்பட்ட அக்கறையைச் சுட்டிக்காட்டினார்.
சிரியாவிலும் லெபனானிலும் இடர் துடைக்கும் பணிகள் செய்துவரும் காரித்தாஸ் அமைப்பின் சேவைகளைப் பாராட்டிய அருள்தந்தை Dal Toso, அப்பகுதிகளில் அமைதி நிலவ அனைவரையும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
சிரியாவில் உருவாகியுள்ள நிலையற்றச் சூழலில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியரும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதால், அவர்கள் அனைவருக்காகவும் செபிக்கும் கடமை உள்ளதென்று Cor Unum அவையின் செயலர் அருள்தந்தை Dal Toso வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.