2012-04-16 15:49:46

வாரம் ஓர் அலசல் - இது பயம், கற்பனையல்ல


ஏப்.16,2012. Kiichi Nakajima என்பவர் ஒரு வயதான ஜப்பானிய தொழிலதிபர். இவர் அணுஆயுதங்களை நினைத்து பயந்து பயந்து வாழ்கிறவர். ஜப்பானில் தொடர்ந்து வாழ்ந்தால் எப்படியும் ஒருநாள் அணுஆயுதம் வீசி அழித்து விடுவார்கள், ஆகவே நாட்டை விட்டே வெளியேறிவிட நினைக்கிறார். குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு தனது குடும்பத்தோடு பிரேசிலில் குடியேறி அமைதியாக வாழ விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினரோ, இவர் காரணமில்லாமல் அணு ஆயுதங்களை நினைத்து அதிகம் பயப்படுகிறார் என்று குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்கின்றனர். இந்தப் பயத்தினால் இவர் முன்பு ஒருமுறை பூமியின் மேலே பாதுகாப்பாக வாழ முடியாது என்று பூமிக்கு அடியில் பதுங்கு குழி போல ஒரு வீடு அமைத்து வாழப் போவதாக நிறைய பணம் செலவழித்தார், ஆகவே இப்போதைய அவரது முட்டாள்தனமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறிவிக்குமாறு குடும்பத்தினர் கேட்கிறார்கள். ஆனால், Nakajima உறுதிபடச் சொல்கிறார் : “நான் சாவைக்கண்டு பயப்படவில்லை; ஆனால் காரணமேயில்லாமல் அணுஆயுதம் வீசிக் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அதுதான் என் பிரச்சனை. எனது பயம் வெறும் கற்பனையல்ல; அது வாழ வேண்டும் என்ற உயிர் மீது இருக்கும் ஆசை; ஜப்பானிலுள்ள அத்தனை மனிதர்களுக்குள்ளும் அணுஆயுதம் குறித்த பயம் ஒளிந்திருக்கிறது; அதை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்; இத்தனை இலட்சம் மக்கள் உடல் கருகி இறந்துபோன பிறகு எப்படி பயமில்லாமல் வாழ முடியும்; அணுஆயுதங்களை ஏன் மனிதர்கள் கண்டுபிடித்தார்கள்; அந்த அறிவற்ற செயலுக்குப் பிறகு சாதாரண மனிதன் எப்படி நிம்மதியாக வாழமுடியும்” என்று கோப்படுகிறார். மேலும், எதற்காக பிரேசிலுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, “அங்கேதான் காடுகள் அதிகம், எவரது கண்ணிலும் படாமல் நிம்மதியாக ஒளிந்து வாழ முடியும்” என்கிறார் Nakajima.
அன்பர்களே, 1955ம் ஆண்டில் வெளியான, I Live In Fear என்று பொருள்படும் Ikimono no kiroku ஜப்பானிய திரைப்படத்தில் இக்காட்சியைப் பார்க்கிறோம். இப்படம், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டு தாக்குதல்களுக்கு உள்ளாகி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்தது. அச்சமயத்திலும் ஜப்பானியரிடம் அணுஆயுதங்கள் பற்றி இருந்த உண்மையான பயத்தைத் திரையில் காட்டியிருக்கிறார் Akira Kurosawa. இப்படம் வெளியாகி 57 ஆண்டுகள் ஆகிய பின்னரும், இன்றும், அணுஆயுதங்கள் பற்றிய பயம் உலகினர் மத்தியில் அகலவே இல்லை, மாறாக அந்தப் பயம் அதிகரித்து வருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டில் (மார்ச்11,2011) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும், ஃபுகுஷிமா அணுஉலை விபத்தும், இந்தப் பூவுலகம் அணுகுண்டுகளால் அழிக்கப்படாவிட்டால் அணு உலைகளால் அழிக்கப்படும் என்ற பயத்தை மீண்டும் மனிதரில் உருவாக்கி இருக்கிறது. I Live In Fear என்ற இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், Nakajima வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மழை பெய்யத் துவங்குகிறது;, அதன் காரணமாகத் திடீரென பலத்த மின்னல் வெட்டுகிறது; பயந்து போன அவர் ஓடிப்போய் குழந்தையின் படுக்கையில் ஒளிந்து கொள்கிறார், படுக்கையில் கிடந்த குழந்தை வீறிட்டு அழத் துவங்குகிறது; எங்கே மறுபடியும் அணுகுண்டு போட்டு விட்டார்களோ என்ற அவரது பயம் முகத்தில் கொப்பளிக்கிறது; அந்த வலியும் பதட்டமும் அணுஆயுதத் தாக்குதல் எவ்வளவு ஆழமாக ஒருவரைப் பாதித்திருக்கிறது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது. இது Nakajimaவின் உணர்ச்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகினரின் உணர்ச்சியும் அதுவே என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா ஏவிய சர்ச்சைக்குரிய ஏவுகணை கடலில் விழுந்து நொறுங்கியது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உள்ளிட்ட பல நாடுகள் உடனடியாக கண்டனம் தெரிவித்தன. இந்நடவடிக்கை, வடகொரியா குறித்த ஐ.நா.பாதுகாப்பு அவை தீர்மானத்தை மீறுவதாக இருக்கின்றது என்று குறை கூறின. வடகொரியாவில் இலட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடும் போது இந்த ஏவுகணை நடவடிக்கை தேவை தானா என்று நாடுகள் கேள்வி எழுப்பின. ஜெனீவாவிலுள்ள பான் கி மூன் பேச்சாளர் கூறுகிறார்...... RealAudioMP3
இரான் அணுத்திட்டம் குறித்து அண்மை ஆண்டுகளாக ஐ.நா அந்நாட்டை எச்சரித்து வருகின்றது. இது தொடர்பாக, உலக அளவிலும் கடும் பிரச்சனைகள் எழுந்தன. இரானின் இந்நடவடிக்கையை தடுப்பதற்காக அந்நாட்டின் மீது தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக இஸ்ரேலும் அண்மைக் காலங்களில் எச்சரித்து வந்தது. ஆயினும், கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக, உலகின் முக்கிய சக்திகளுக்கும் இரானுக்கும் இடையில் இச்சனிக்கிழமை துருக்கி நாட்டின் Istanbul லில் பேச்சுவார்த்தை நடந்தது. இது பயனுள்ளதாக இருந்ததாக ஐரோப்பிய சமுதாய அவையின் வெளியுறவு கொள்கைத் தலைவர் Catherine Ashton தெரிவித்தார். இதன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை பாக்தாத்தில் வருகிற மே 23ம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பேரழிவின் காலமாக இருந்தது. இரண்டு உலகப் போர்கள், இதுவரை மனிதர் கண்டறியாத புதிய ஆயுதங்கள், வன்முறை எனக் கல்வியும் அறிவியலும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட்டதைவிடவும் அழிவை உண்டாக்குவதற்கே அதிகம் செலவழிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டு மார்ச் 27ம் தேதி தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி பொருட்கள், அணுசக்திக்குத் தேவையான வேதியப் பொருள்கள், தொழில்நுட்பங்கள், தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ள வரை, அணுஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கும். இதைத் தடுக்க ஒரே வழி, அணு ஆயுதம் இல்லாத சுதந்திர உலகை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இன்றும், இந்தியா உட்பட உலகின் ஒன்பது அணுசக்தி நாடுகளிடம் சுமார் இருபதாயிரம் அணுஆயுதங்கள் இருப்பதாக ICAN என்ற அணுஆயுதங்களை ஒழிப்பதற்கு முயற்சிக்கும் பன்னாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அணுஆயுதங்கள், ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல் 1,50,000 மடங்கு அழிவு சக்தி வாய்ந்தவை என்று ICAN வெளியிட்ட 180 பக்க அறிக்கை எச்சரிக்கிறது. எனவே இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்த அணுஆயுதங்கள், அணுசக்தி ஆகியவை மீது மக்கள் கொண்டிருக்கும் பயம் வெறும் கற்பனையல்ல, உண்மையானது.
நிலத்திலும் நீருக்கடியிலும் நடத்தப்படும் அணுசக்திப் பரிசோதனைகள், அவை நடத்தப்பட்டு பல ஆண்டுகள் கழித்தும் எவ்வளவு கடும் நலவாழ்வுப் பிரச்சனைகளை மக்களில் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதற்கு அண்மையில் வெளியான மார்ஷெல் தீவுகள் குறித்த செய்திகளே சான்று. 1054 அணுப் பரிசோதனைகளை நடத்தியுள்ள அமெரிக்க ஐக்கிய நாடு (16.07.1945 - 23.09.1992) 1946க்கும் 1958க்கும் இடைப்பட்ட காலத்தில் Marshall தீவுகளில் மட்டும் 67ஐ நடத்தியது. 1952 மற்றும் 1954ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஹைட்ரசன் அணுகுண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்டதைவிட சுமார் 750 மற்றும் ஆயிரம் மடங்கு வீரியம் கொண்டதாக ஊடகத்தில் வாசித்தோம். 'நானே மரணமாகிறேன். உலகங்களை அழிப்பவனாகிறேன்' என்று உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கிய அமெரிக்கக் குழுவின் தலைவர் Julius Robert Oppenheimer கூறியது போன்று, அணுஉலைகளும், அணுஆயுதங்களும் அணுப் பரிசோதனைகளும் மரணங்களையும் அழிவையுமே ஏற்படுத்துகின்றன. எனவே இவை குறித்த மக்களின் பயம் கற்பனையல்ல, உண்மையானது.
கடந்த வாரத்தில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதைக் கண்டு புவியியல் ஆய்வாளர்களே சற்று நடுங்கிப் போனார்கள். அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல நகரங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்நேரத்தில் மக்கள் எவ்வளவு தூரம் பயந்து வீட்டை விட்டு வெளியேறி தெருக்களுக்கு வந்தார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என Queensland பல்கலைக்கழகம் கடந்த வாரத்தில் (13ஏப்.,2012) கேட்டுக் கொண்டுள்ளது. உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவுதான் உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ்மேனியா நகருக்கு அருகில் நடத்திய கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2 மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது.
உலகில் இயங்கும் அணுசக்தி உலைகள், யுரேனியம் தயாரிப்பு உலைகள், அணுஆயுதத் தயாரிப்புகள், ஏவுகணைப் பரிசோதனைகள், கடலில் கொட்டப்படும் அணுக்கழிவுகள் பூமி, கடல் தாய்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. பொறுக்க முடியாத கட்டத்தில், பூமி அதிர்வுகளாக, பனிப்பாறைகள் உருகுவதாக, கடல்நீர்மட்டம் உயர்வாக, சுனாமியாக மக்களது உயிர் வாழ்க்கையில் பயத்தை அதிகரித்து வருகின்றன. எனவே அப்பாவி குடிமக்களின் உண்மையான அச்சத்தைப் போக்க வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமையாகும். அணுஆயுதப் பயம் போன்று ஒவ்வொரு நாட்டிலும் மக்களை அச்சுறுத்தக்கூடிய வேறு பல பயங்களும் இருக்கின்றன. மனிதரில் பயங்களை நீக்கி அமைதியைத் தரவல்லவர் கிறிஸ்து, ஏனெனில் இயேசு மட்டுமே கொடுக்கவல்ல அமைதி எனும் கொடை, தீமையின் மீது அவர் கண்ட முழுமையான வெற்றியின் கனியாகும் என்று, இத்திங்களன்று தனது 85 வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் சொன்னார். RealAudioMP3 சோளக்காட்டுப் பொம்மை வயலில் கம்பீரமாக நின்றது. பார்க்கப் பயங்கரமாக இருந்தது. கூட்டமாய் வந்த கொக்குகளில் ஒன்று கேட்டது : “ஏய், சோளக்காட்டுப் பொம்மையே, இப்படி வெயிலிலும் மழையிலும் பகலிலும் இரவிலும் ஒரே இடத்தில் தனியே கிடந்து தவிக்கிறாயே, கஷ்டமாக இல்லையா?” என்று. அதற்கு அந்தப் பொம்மை புன்னகையுடன், “தனிமையா, தவிப்பா.. எனக்கா.. ஒருபோதும் இல்லை. என்னைப் பார்க்கும் மிருகங்களும் பறவைகளும் அலறியடித்து ஓடுகின்றன. அதைப் பார்க்கும் போது இங்கே தனியே அவதிப்படுவது கடினமாக இல்லை” என்றது. மேலும் சொன்னது : “பயமுறுத்தி வாழும் வாழ்வே வாழ்வு. அதிலுள்ள இன்பமே இன்பம்”.
ஆனால் பொம்மைக்கு நாம் சொல்வது – உனது உருட்டலும் மிரட்டலும் காட்டில் கதிர்கள் உள்ள வரைக்கும்தான் என்று.
அப்பாவி மக்களைப் பயத்தில் வாழ வைக்கும் தலைவர்களே, உங்களது உருட்டல் மிரட்டல், பயமுறுத்தி வாழும் பதவிக்காலம் தரும் இன்பம் நீண்ட காலம் நிலைக்காதது. ஆனால் உங்கள் செயல்கள் மக்களில் உருவாக்கும் உண்மையான பயமும், துன்பங்களும் பலகாலம் நிலைத்திருப்பவை.







All the contents on this site are copyrighted ©.