2012-04-16 15:54:06

இந்தியாவில் திரு அவையின் பிறரன்புப் பணிகள் மதமாற்ற முயற்சியாக தவறாக நோக்கப்படுகிறது


ஏப்ரல்,16,2012. மதமாற்றத்திற்கான ஒரு முகமூடியாக இந்தியத் தலத்திருஅவையின் பிறரன்பு பணிகள் சந்தேகத்துடன் நோக்கப்படுவதால், அப்பிறரன்புப்பணிகளுக்கு இருக்கும் ஆபத்துக்கள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீட அதிகாரி கர்தினால் இராபர்ட் சாரா.
பிறரன்புப் பணிகளின் நோக்கம் மதமாற்றமே என சிலர் தவறாகக் குற்றஞ்சாட்டுவதால் மக்களுக்கான அத்தியாவசியப்பணிகளை ஏற்று நடத்தமுடியாதச் சூழல் இருக்கிறது என இந்திய ஆயர்கள் தன்னிடம் கவலையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கான 'கோர் ஊனும்' எனும் அவையின் தலைவர் கர்தினால் சாரா.
எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல் மக்கள் பணிகளை ஏற்று நடத்துவது சிரமமாக உள்ளது என மேலும் கூறினார் கர்தினால்.
இதற்கிடையே, இந்தியாவில் திருஅவையின் பிறரன்புப் பணிகள் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் மைக்கல் ராய், கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கண்டு இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளோர் அஞ்சுவதாகவும், பிறரன்புப் பணிகளின் உதவியுடன் சமூக அடிமட்ட மக்கள் முன்னேறி வருவதை உயர்மட்டத்தில் உள்ளோர் விரும்புவதில்லை என்பதாலேயே இக்குற்றச்சாட்டுகள் எழுகின்றன எனவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.