2012-04-14 15:27:21

திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல் இல்லாத புனித மேலங்கி


ஏப்.14,2012 : ஜெர்மனியின் Trierல் மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதப் பொருளான கிறிஸ்துவின் தையல் இல்லாத மேலங்கி, திருஅவையின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்து தமது திருப்பாடுகளின் போது அணிந்திருந்ததாக நம்பப்பட்டு, மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு அதிவணக்கம் செய்யப்பட்டு வரும் இந்த மேலங்கி, தமது சக்தியால் அல்ல, இறைவனின் செயலால் இன்னும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தப் புனித மேலங்கியை Constantine பேரரசரின் தாயான புனித ஹெலன், Trier க்குக் கொண்டு வந்தார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பேரரசர் முதலாம் Maximilian னின் வேண்டுகோளின்பேரில், இந்தப் புனித மேலங்கியை பேராயர் Richard von Greiffenklau 1512ம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். அதன் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு தடவைகள் மட்டுமே இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இப்புனித மேலங்கி முதல்தடவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு, இவ்வெள்ளி முதல் வருகிற மே 13 வரை Trierல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நாள் தொடக்க விழாவில் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellete கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கென திருத்தந்தையும் Trier ஆயர் Stephan Ackermannக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.
அச்செய்தியில், இந்த மேலங்கி, சிலுவையில் அறையுண்டவர் தமது திருஇரத்தத்தால் புனிதப்படுத்திய திருஅவைக்கு வழங்கிய பிளவுபடாத பரிசாகும், இதனால் இப்புனித மேலங்கி திருஅவைக்கு அதன் மாண்பை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.